இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 14 தபால் நிலையங்கள் திருடர்களால் உடைக்கப்பட்டு சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த தபால் நிலையங்களில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கோடிரூபா திருடப்பட்டதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும், முத்திரைகள் மற்றும் ஏனைய பெறுமதியான சொத்துக்களும் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அறிவித்து தபால் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸாரின் பார்வையில் உள்ள தம்புத்தேகம தபால் நிலையத்திலும் திருடர்கள் புகுந்துள்ளதாக சாந்த பண்டார தெரிவித்தார்.
கேகாலை மாவட்ட சபை உறுப்பினர் திருமதி ராஜிகா விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.