தென்னிந்திய தொலைக்காட்சியொன்றில் பாடல் போட்டியில் பங்கேற்கும் யாழ்ப்பாண சிறுமி கில்மிஷாவின் குடும்பத்திடம் நூதனமான முறையில் பணம் பறிக்க மேற்கொண்ட முயற்ச பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அவரது உறவினர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் இட்ட பதிவு வருமாறு-
நேற்று எனக்கு சென்னையில் இருந்து ஒரு அவசர அழைப்பு வந்தது.
அது கில்மிஷா யாழிசையின் Kilmisha Yaazhisai தாயார் தர்மினியிடமிருந்து.
“மாமா, கொழும்பில் இருந்து ஒருத்தன் கோல் பண்ணி கில்மிஷாவுக்கு கனடாவில் இருந்து ஒரு பார்சல் வந்திருக்கு, அதுக்கு 24,000 ரூபா கட்ட வேணும் என்கிறான். தண்டை எக்கவுண்ட் நம்பரையும் அனுப்பி வைச்சிருக்கிறான். ஒருக்கா என்னெண்டு விசாரிச்சுச் சொல்ல முடியுமா?”
அந்த போன் நம்பரை எனக்கு அனுப்பி வைத்தார்.
நான் அந்த நம்பருக்கு எடுத்தன்.
அழைப்பை எடுத்தவர் சொன்னார்,
“அண்ணை கில்மிஷாவுக்கு கனடாவிலே இருந்து ஒரு பெரிய மியூசிக் இன்ஸ்றுமெண்ட் வந்திருக்கு. இலங்கைக் காசுக்கு எட்டு லட்சம் ரூபா பெறுமதி. அது இப்ப ஏயார்போட்டிலே கஸ்டம்சிலே இருக்கு. அதுக்கு வாட் (VAT) கட்ட வேணும்”
நான்,
“நீங்கள் யார்?”
அவர்,
“நாங்கள் பார்சல் சேர்விஸ் செய்யிறனாங்க!”
நான்,
“உங்கடை கொம்பனிப் பேர்?”
ஏதோவொரு, கேள்விப்படாத பேர் சொன்னார். வத்தளையில் இருக்கிதென்றும் சொன்னார்.
நான் கேட்டன்,
“அந்தப் பார்சலை அனுப்பினவர்க்ளிண்டை பெயர் என்ன விலாசம் என்ன?”
அவர் சொன்னார்,
“புலம்பெயர் தமிழர் ஐக்கிய ஒன்றியம், ஸ்காபரோ, கனடா”
நான் கேட்டன்,
“புலம்பெயர் தமிழர் ஐக்கிய ஒன்றியம் என்று தமிழிலியோ அட்றஸ் எழுதியிருக்கு?”
அவர் டக்கென்று, “ஓம்” என்றார்.
அப்பவே எனக்கு டவுட்டு.
நான் கேட்டன்,
“சரி, VAT கட்ட வேண்டிய இன்வொய்சை படம் பிடிச்சு அனுப்புங்கோ”
அவர்,
“காசைக் கட்டினாத்தான் அது எங்கடை கைக்குக் கிடைக்கும்” என்றார்.
நான் சொன்னன்,
“சரி அப்ப, உங்கடை ஒவ்விஸ் விலாசத்தைத் தாங்கோ நாங்களே நேரா வாறம்”
சரி என்று சொல்லி போனை வைத்தவன் அதுக்குப் பிறகு எண்டை நம்பரை ப்ளொக் செய்துவிட்டான்.
சமூகவலைத்தளத் “தகவல்கள்” ஐ வைத்தே எப்படியெல்லாம் திருட்டைத் திட்டமிடுகிறாகள்.
பி.கு:
“காணாமல் ஆக்கப்பட்ட” கில்மிஷாவின் மாமனைக் கொண்டு வந்து தருவதாக ஏற்கனவே சில திருட்டுக் கும்பல்கள் பல இலட்சம் பணத்தை அந்தக் குடும்பத்திடமிருந்து கறந்துள்ளார்கள்.