ஹகுரன்கெத்த, ஹேவாஹெட்டை, ரஹதுங்கொட தோட்டத்தில் வசிக்கும் 22 வயதான இளம் தாயும், ஒன்றரை வயது மகளும் காணாமல் போன விவகாரத்தின் பின்னணியில் குடும்பத் தகராறு இருப்பது தெரிய வந்துள்ளது.
தனது மனைவியையும், ஒன்றரை வயது மகளையும் காணவில்லையென ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அந்தப் பெண் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியதை கண்டறிந்துள்ளனர்.
மனைவியையும் மகளையும் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரலாம் என்ற நம்பிக்கையில், இருவரும் காணாமல் போயுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்து, பத்திரிகையாளர்களுக்கும் தகவல் கொடுத்ததாக பொலிஸ் விசாரணையில் கணவர் மோகனசுந்தரம் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
22 வயதான வெள்ளையம்மா சுரேந்திர ராணி, ஒரு வயது ஏழு மாதமான தருஷிகா அபி ஆகியோர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மனைவிக்கு தலையில் அடிபட்டிருந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற, குழந்தையையும் அழைத்துக் கொண்டு, ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு பேருந்தில் சென்றதாகவும், அவரை பேருந்தில் பலர் கண்டதாகவும், அவர் வீடு திரும்பவில்லையென்றும் முறைப்பாடு செய்திருந்தார்.
கணவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதாகவும், இதன் காரணமாக அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போனதாக கூறப்பட்ட தாயும், மகளும் உறவினர் வீட்டில் இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இருவரையும் கண்டுபிடிக்க ஹகுரன்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.