13வது திருத்த கோரிக்கையால் இந்தியாவின் நிலைப்பாடு மாறியதா?: அமெரிக்க தூதர் முன்பாக வெளியான தகவல்!

Date:

அமெரிக்க தூதர் ஜூலி சுங் நேற்று (17) தமிழ் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சில் ஈடுபட்டிருந்தார். அப்போது 13வது திருத்தம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான- ஆனால், முக்கியமான வாதப்பிரதிவாதமொன்று நிகழ்ந்துள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 13வது திருத்தத்தை வலியுறுத்தி தமிழ் கட்சிகள் அனுப்பிய கடிதத்தில், தமிழ் அரசு கட்சி ஏன் கையெழுத்திடவில்லையென்பதற்கு ஒரு வியாக்கியானம் செய்தார்.

2022 ஜனவரி மாதம் தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தன. 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு அதில் கோரப்பட்டிருந்தது. இந்த கடிதத்தின் பின்னர் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இலங்கையில் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி அர்த்தமுள்ள அதிகார பகிர்வை வலியுறுத்தி வந்த இந்தியா, அந்த கடிதத்தின் பின்னர் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் சுருக்கிக் கொண்டு விட்டது. இது எமக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

இதன் காரணமாகவே இம்முறை 13வது திருத்தத்தை மாத்திரம் வலியுறுத்தி எழுதப்பட்ட கடித்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி கையொப்பமிடவில்லை. நாம் 13வது திருத்தத்தை நீக்குமாறும் கோர மாட்டோம், நடைமுறைப்படுத்துமாறும் கோர மாட்டோம் என்றார்.

உடனே பதிலளித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ் கட்சிகள் இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடித்தில் தமிழ் மக்களின் அபிலாசை என்னவென்பதை தெளிவாக சொல்லியுள்ளோம். 1956ஆம் எமது மக்கள் சமஸ்டிக்கே வாக்களித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால் தற்போது சாத்தியமான வகையில் 13வது திருத்த்தை உடனடியாக அமுல்ப்படுத்தவே கடிதத்தில் கோரியுள்ளோம்.

1987ஆம் ஆண்டு முதல் இந்தியா ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளது. இந்திய- இலங்கை உடன்படிக்கையை அமுல்ப்படுத்தி, 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டுமென்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

தமிழ் கட்சிகளின் கடிதத்தினால் இந்தியாவின் நிலைப்பாடு மாறியுள்ளதாக சுமந்திரன் கூறுகிறார். அவர் அந்த தகவலை எங்கிருந்து பெற்றார் என எனக்கு தெரியாது. எங்களுடனும், ஏனைய தமிழ் தரப்புக்களுடனும் பேசும் இந்திய உயர்மட்ட தரப்புக்கள் எதுவும் அப்படியான மாற்றத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்தியா ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளது. தற்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர், மிக நீண்டகாலமாகவே, 13வது திருத்தம்தான் இந்தியாவின் நிலைப்பாடு என்பதை அனைத்து தமிழ் கட்சிகளிடமும் வெளிப்படையாக கூறிவிட்டார். இறுதியாக, இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளிட்ட அனைத்து தமிழ் கட்சிகளுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் வெளிப்படையாக கூறியிருந்தார். 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தும் அழுத்தத்தைத்தான் இந்தியாவினால் செய்ய முடியும். அதற்கு மேலதிகமாக ஏதாவது தேவையெனில் அது உங்களது கெட்டித்தனத்தால் பெற்றுக்கொள்ளுங்கள் என தெளிவாக கூறினார்.

13வது திருத்தத்தையும், தமிழ் மக்கள் கோரினால்தான், இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டார். நீங்கள் (அரசியல் கட்சிகள்) பேசாமலிருக்க நாம் எதுவும் செய்ய முடியாது என பிரதான தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இருந்த கலந்துரையாடலில் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இந்தியா தன்னால் முடிந்தது எது என கூறியதோ, அதையே மோடியிடம் கேட்டுள்ளோம் என்றார்.

இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரும், 13வது திருத்தத்தை தமது கட்சி ஆதரிக்காது என குறிப்பிட்டிருந்தார்.

13 தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய சித்தார்த்தன், “13வது திருத்தத்தில் மிகப்பெரிய சுவாரஸ்யமும் உள்ளது. அதை எதிர்ப்பவர்கள் கூட, மாகாணசபை தேர்தல் என்றால் போட்டியிடுவார்கள்“ என்றார்.

அமெரிக்க தூதர் மெல்லியதாக சிரித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிரிக்காமல் இருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்