இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கச்சத்தீவு மீட்பு வழக்கை அவசரமாக விசாரிக்க நீதிபதிகளிடம் கேரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்தது. 1974 இல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர்.
1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளனர். 2013இல் 111 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொலை செய்தனர். 19.06.2023இல் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 21.6.2023 இல் 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். எனவே 22 மீனவர்களை மீட்கவும், 1974ஆம் ஆண்டின் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கச்சத்தீவு மீட்பது குறித்து இந்த நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது. மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் மனுதாரர் தரப்பில், வழக்கு நிலுவையில் இருக்கும்போது இலங்கை கடற்படையினர் சில இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர். எனவே, வழக்கை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இன்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஜூலை 12 இல் வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.