லிபியாவின் முன்னாள் தலைவர் கடாஃபியின் மகன் ஹன்னிபால் கடாஃபி, லெபனான் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 1969 முதல் 2011 வரை லிபியாவின் சர்வாதிகாரியாக செயல்பட்டவர் முகமது கடாபி. கடந்த 2011இல் அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சொந்த ஊரான சிர்டேவில் பதுங்கியிருந்த கடாபியைப் புரட்சிப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
முகமது கடாபியின் ஐந்தாவது மகன் ஹன்னிபால் கடாபி. லெபனான் ஷியா இமாம் மவுடா அல் சடார், லிபியாவின் திரிபோலிக்கு 1978 இல் பயணம் மேற்கொண்டபோது காணாமல் போன வழக்கில், உண்மையை மறைத்ததாக ஹன்னிபால் கடாபி, பெய்ரூட்டில் உள்ள உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகளால் கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிரியா-லெபனான் எல்லையில் பிடிபட்ட ஹன்னிபால், லெபனான் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது கைது தொடர்பாக வழக்கு விசாரணை எதுவும் நடைபெறாததை கண்டித்தும் ஹன்னிபால் பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம் காரணமாக, அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹன்னிபால் உயிருக்கு ஆபத்தான நிலையில் லெபனான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹன்னிபாலின் உடல் நிலை குறித்து பேட்டி அளித்த அவரது வழக்கறிஞர், “47 வயதான ஹன்னிபாலுக்கு தசைகள், கைகள் மற்றும் கால்களில் பலவீனம் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
கடாஃபியின் மறைவுக்கு பிறகு லிபியாவில் தற்போது ஏராளமான கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. தலைநகர் திரிபோலி 3 முக்கிய கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. லிபியாவில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும், வறுமையில் இருந்து விடுபடவும் பெரும்பாலான மக்கள் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர்.