உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் இன்று நடந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 133 ஓட்டங்களால் இலங்கை அணி வீழ்த்தியது. என்றாலும், இலங்கை அணியின் நடு, பின்வரிசை துடுப்பாட்ட பலவீனத்தை இன்றைய போட்டியும் வெளிச்சமிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் ஒக்டோபர் முதல் நடைபெறவுள்ளது. இதில் 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன. எஞ்சிய 2 இடங்களுக்கான அணிகள், தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும்.
இந்நிலையில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் சிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
சிம்பாவேயின் புலவாயோ குயின்ஸ் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை- அயர்லாந்து அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது.
இலங்கையின் தொடக்கம் சுமாராகவே அமைந்தது. தொடக்க வீரர் பதும் நிசங்க 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த குசல் மெண்டிஸ் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார். இலங்கை 48/2.
இந்த தொடரில் இரண்டாம் நிலை அணிகளிடம் முரட்டு ஃபோர்மை வெளிப்படுத்தும் திமுத் கருணாரத்ன அட்டகாசமாக ஆடி, ஒருநாள் போட்டிகளில் முதலாவது சதத்தை அடித்தார். இளம் வீரர் சதீர சமரவிக்ரமவும் சிறப்பாக ஆடி அரைச்சதமடித்தார். அவர் 82 ஓட்டங்களை பெற்றார். கருணாரத்ன 103 ஓட்டங்களை பெற்றார். இருவருக்கும் ஒருநாள் ஆட்டங்களில் அதிகபட்ச ஓட்டம் இதுதான்.
இவர்களின் இணைப்பாட்டத்தினால்தான் இலங்கை பிழைத்தது. பின்வரிசையில் தனஞ்ஜய டி சில்வா 42 ஓட்டங்களை பெற்றார். இலங்கை 281 ஓட்டங்களை பெற்றபோது 5வது விக்கெட்டை இழந்தது. ஆனால் 49.5 ஓவர்களில் 325 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 44 ஓட்டங்களில் கடைசி 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. இதுதான் வழக்கமான இலங்கை அணி. இரண்டாம் தர அணிகள், முன்வரிசை வீரர்கள் பொறுப்பாக இதுவரை ஆடிய காரணங்களினால் இலங்கையின் வண்டவாளம் கடந்த 2 போட்டிகளிலும் வெளிப்பட்டிருக்கவில்லை. கொஞ்சம் பலமான அயர்லாந்துடன் ஆடியதும், இலங்கையின் துடுப்பாட்டம் பல்லிளித்தது. 6 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்கள் பெற்றனர். உதிரிகள் 27.
ஒரு கட்டத்தில் இலங்கை சுலபமாக 350+ ஓட்டங்களை பெறும் நிலையிலிருந்தது. ஆனால் கிடைத்தது 325.
மார்க் அட்டயர் 46 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இலக்கை விரட்டிய அயர்லாந்து 31 ஓவர்களில் 192 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. கர்டிஸ் கேம்பர் 39 ஓட்டங்கள்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 79 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள். கடந்த இரண்டு தகுதிகாண் ஆட்டங்களிலும் 6,5 விக்கெட்டுக்களை ஹசரங்க வீழ்த்தியிருந்தார்.
ஆட்டநாயகன் திமுத் கருணாரத்ன.