பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட உருத்திரிபடைந்த கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களை சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சைப்ரஸ், ஜோர்டான் மற்றும் துபாய் நாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பி வந்த 16 பேரே இப்படி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜனவரி 26 க்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளிலும் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகளில் 92 பேரின் மாதிரிகளில் இருந்த வைரஸ் மரபணு பரிசோதனையின் மூலம், இலங்கைக்குள் உருத்திரிபடைந்த கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாக, ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகம் அறிவித்திருந்தது.
ஜனவரி 26ஆம் திகதியின் பின்னர் நாட்டில் உருத்திரிபடைந்த வைரஸ் தொற்றுடன் 16 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதுவரை 26 பேர் இந்த வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இறுதியாக அடையாளம் காணப்பட்ட 16 உருத்திரிபடைந்த வைரஸ் தொற்றாளர்களில், 13 பேர் வடமாகாணத்தில் உள்ள பம்பைமடு, முழங்காவில் தனிமைப்படுத்தல் மையங்களில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் நெருங்கிய சகாக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 14 நாள் தனிமைப்படுத்தல் செயன்முறை நிலவுகின்ற போதும், அவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.