முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குருநாகலில் தேர்தல் பேரணியின் போது படுகொலை செய்யத் திட்டமிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கம்பஹா முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே மற்றும் 3 தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடரலாமா என்பது குறித்த உத்தரவை, ஜூலை 6ஆம் திகதி வழங்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட லக்ஷ்மன் குரே சார்பில் ஆஜரான சட்டத்தரணி காமினி அல்விஸ், அரச தரப்பு சாட்சியங்களின் அடிப்படையில் வழக்கை தொடர முடியாது என ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார்.
இரண்டாவது சந்தேகநபரின் வாக்குமூலத்தை ஆதாரமாக ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், இந்த வழக்கில் அதே வாக்குமூலத்தை ஆதாரமாக முன்வைக்க முடியாது என முதற்கட்ட ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
பிரதிவாதிகள் தரப்பினரின் பூர்வாங்க ஆட்சேபனைக்கு எதிராக சட்டமா அதிபர் நேற்று எதிர் ஆட்சேபனைகளை முன்வைத்தார்.
சூழ்நிலைகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழக்கின் பராமரிப்பது தொடர்பான உத்தரவை வழங்குவதற்காக வழக்கு ஜூலை 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி குருநாகல் மாளிகாப்பிட்டியவில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் முன்னாள் ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டமிட்டதாக கம்பஹா முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உட்பட நான்கு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
செல்வராஜா கிருபாகரன், நடேசன் துஹிய நாகன் மற்றும் தங்கவேலு நிமலன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.