அமெரிக்காவின் டெக்சாஸில் 18 வயது இளைஞர் ஒருவர், தனது சொந்தக் குடும்பத்தினரைக் கொன்றதற்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசிப்பவர் சீசர் ஒலால்டே (18). இவர் தற்கொலைக்கு முயல்வதாக காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனே சீசர் ஒலால்டேவின் வீட்டுக்கு விரைந்த காவல்துறை, தற்கொலைக்கு முயன்ற சீசர் ஒலால்டேவைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, பல திடுக்கிடும் காட்சிகளைக் கண்டு அவரைக் கைதுசெய்தது.
அவரது வீட்டில் பார்த்தது குறித்து காவல்துறை செய்தியாளர்களிடம் பேசியபோது,”சீசர் ஒலால்டே அவரின் குடும்பத்தாரைச் சுட்டுக் கொலைசெய்திருக்கிறார். அதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, ‘என் குடும்ப உறுப்பினர்கள் மனித மாமிசம் உண்பவர்கள். அவர்கள் என்னையும் சாப்பிட முயன்றார்கள். அதனால் சுட்டுக்கொலை செய்தேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டில், அவருடைய பெற்றோர்களான ரூபன் ஒலால்டே, ஐடா கார்சியா, அவரின் மூத்த சகோதரி லிஸ்பெட் ஒலால்டே, இளைய சகோதரர் ஆலிவர் ஒலால்டே ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. மேலும், பிரேத பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. கொலைசெய்யப்பட்டவர்கள் வீட்டின் பல்வேறு இடங்களில் சுடப்பட்டு இறந்திருக்கின்றனர்.
பல இடங்களில் ரத்தம் தெறித்திருந்தது. ஆனால், அவர்களின் அண்டை வீட்டாரிடம் விசாரித்தபோது, ‘ரூபன் ஒலால்டே குடும்பத்தார்கள் மிக நல்லவர்கள். கடும் உழைப்பாளிகள். அவரின் குடும்பம் மிக அழகானது’ எனத் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.