ஞாயிற்றுக்கிழமை (21) ராகமையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் வரிசையை விட்டு முன்னால் சென்ற நீதவான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தகராற்றில் ஈடுபட்ட தம்பதிகள் உட்பட மூவரை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதவான் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தங்கள் பாதுகாவலருடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். வைத்தியரைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது இரண்டு பெண்களும் ஆணும் நீதவான் உள்ளிட்ட குடும்பத்தினருடன் தகராற்றில் ஈடுபட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த முழு சம்பவத்தையும் பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
ராகம, பதுவத்தையில் வசிக்கும் 37 மற்றும் 38 வயதுடைய கணவன்-மனைவி தம்பதிகள் மற்றும் அவர்களது உறவினரான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் உறவினர் தெஹிவளையில் வசிக்கும் 34 வயதுடையவர்.
34 வயதான பெண் அந்த தனியார் மருத்துவமனையில் ஒரு வைத்தியரை சந்தித்து பரிசோதனை செய்ய வந்திருந்தார். அவரடன், உறவினர்களான கணவனும் மனைவியும் வந்திருந்தனர். நீதவான் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அதே வைத்தியரிடம் ஆலோசனை பெறச் சென்றிருந்தார்.
வரிசையில் மற்றையவர்கள் காத்திருந்த போது, நீதவான் முன்னால் சென்று வைத்தியரை சந்தித்ததே பிரச்சினைக்கு மூலகாரணம் என பொலிசார் தெரிவித்தனர்.
வைத்தியரை சந்தித்து விட்டு நீதவானும் குடும்பத்தினரம் வெளியே வந்த போது, 34 வயதான பெண்ணும், உறவினர்களான கணவனும், மனைவியும் தகராற்றில் ஈடுபட்டனர். நீதவானை வழிமறித்தும் வைத்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.