குஜராத் மாநிலதின் மொடாசாவைச் சேர்ந்தவர் நிலன்ஷி படேல் (வயது 18). இவர் உலகின் மிக நீளமான முடி வளர்த்த பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு தனது முடியை 170 சென்டி மீட்டருக்கு வளர்த்து, டீனேஜ் பிரிவில் அவர் இச்சாதனையை அவர் படைத்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு தனது முடியை 190 சென்டி மீட்டருக்கு வளர்த்து, தனது சாதனையை தானே முறியடித்து புதிய கின்னஸ் சாதனையை முடித்தார்.
தொடர்ந்து 18 வயது நிறைவடையும் முன் தனது முடியை 200 சென்டி மீட்டர் (6 அடி 6.7 அங்குலம்) வளர்த்தார். இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக வெட்டாமல் வளர்த்து வந்த தனது முடியை, தற்போது வெட்டியிருக்கிறார். தனது கூந்தலை அருங்காட்சியகம் ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கவும் முடிவு செய்திருக்கிறார். தான் முடி வெட்டிக் கொண்ட வீடியோவையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
தனது முடியை பெருமையாக கருதும் அவர், மக்கள் தன்னுடன் செல்பி எடுத்துக் கொள்வர் எனவும், இதனால், பிரபலம் போல் தான் உணர்வதாகவும் முன்பு அளித்திருந்த பேட்டியில் கூறியிருந்தார். தனது 6 வயதின் போது, முடி வெட்டி கொண்ட போது ஏற்பட்ட மோசமான அனுபவமே, தனக்கு முடியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.