மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டில் சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.
இதனிடையே கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க, ரஷ்ய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி சந்தையில் அறிமுகமானது. பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சந்தை விலையைவிட கூடுதல் தொகை கொடுத்து இஸ்ரேல் அரசு தடுப்பூசிகளை வாங்கி குவித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதன் விளைவாக நாட்டு மக்கள் தொகையில் 57 சதவீதம் பேருக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டது. மீதமுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக இஸ்ரேலில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு 150 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்படுகிறது. வைரஸ் அச்சுறுத்தல் குறைந்திருப்பதால் இஸ்ரேல் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை. எனினும் மூடப்பட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிய வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இஸ்ரேல் வருவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.