மணமேடைக்கு வந்து மணப்பெண்ணுக்கு மாலை அணிவித்த பிறகு, மணப்பெண்ணின் சகோதரியை மணமகன் திருமணம்செய்த விநோத சம்பவம் நடந்திருக்கிறது
பீகார் மாநிலத்தில் மணமகளுக்கு அவரின் சொந்த சகோதரியே வில்லியாக வந்திருக்கிறார். பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் என்ற கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
சாப்ராவின் பீன் டோலியில் வசிக்கும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமாருக்கும், பாமோரி கிராமத்தை சேர்ந்த ரிங்கு குமாரிக்கும், ஒரு வருடத்தின் முன்னரே திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்தது.
மணமகன் வீட்டார், திருமண ஊர்வலமாக புறப்பட்டு, மணமகளின் கிராமத்தை அடைந்தனர். மணமகள் ரிங்கு குமாரியின் தந்தை ராமு பீன் தனது வீட்டு வாசலில் அவர்களை வரவேற்றார். திருமண சம்பிரதாயங்கள் ஆரம்பமானது. மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். தாலி கட்டும் நேரம் வந்த போது, திடீரென்று திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு மிகப்பெரிய நாடகமே தொடங்கியது.
இந்த நேரத்தில் மணமகளின் இளைய சகோதரி புதுல் குமாரி, `எனக்குத்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என்று கூறி ரகளையில் ஈடுபட ஆரம்பித்தார்.
இதனால் திருமண வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது. பிரச்னை செய்த பெண்ணிடம் அவரின் பெற்றோர் பேசிப்பார்த்தனர். ஆனால், அந்தப் பெண் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். உறவினர்கள் எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள். அதோடு உனக்கும் விரைவில் திருமணம் செய்துவைப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், அதைக் கேட்காமல் வீட்டின் மாடிக்குச் சென்று தனக்கு இப்போது அக்காவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையுடன் திருமணம் செய்துவைக்கவில்லையெனில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார்.
அதோடு மணமகனிடமும் சென்று, தன்னைத் திருமணம் செய்துகொள்ளவில்லையெனில் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார்.
அக்காவுடன், திருமண நிச்சயதார்த்தம் முடிந்தாலும், அதன் பின்னர் கடந்த ஒரு வருடமாக அத்தானும் தானும் காதலித்து வருகிறோம் என அடுத்த குண்டை போட்டார். மாப்பிள்ளை திருதிருவென விழித்துக் கொண்டிருந்தார்.
இதனால் இரு குடும்பத்தினரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர். இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தகராறு ஏற்பட்டது. உடனே போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், உள்ளூர் மஞ்சி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, இருதரப்பினரிடமும் பேசி, மணமகன் ஏற்கெனவே முடிவான பெண்ணை திருமணம் செய்யாமல், அவரது இளைய சகோதரியான புதுல் குமாரியை திருமணம் செய்வது என்று முடிவானது.
அதன்படி மணமகன் ஒரு பெண்ணுக்குக் கழுத்தில் மாலை அணிவித்துவிட்டு, வேறு ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டினார்.
அக்காவின் திருமண மேடையிலேயே, மாப்பிள்ளைக்கும் மைத்துனிக்குமிடையிலான காதல் கதை வெளிப்பட்டது. இருவரும் ஒரு வருடமாக தொலைபேசியில் கடலை போட்டு வந்துள்ளனர். புதுல் குமாரியை பரீட்சைக்காக அத்தானே மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றும் வந்துள்ளார். இதன்போது, அவர்களுக்குள் காதல் துளிர்விட்டுள்ளது.




