யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் தனியார் காணிகளில் இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றக்கோரி, தமிழர் தரப்பினால் முன்னெடுக்கப்படும் அமைதிப் போராட்டத்திற்கு பொலிசார் இடையூறு விளைவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பருத்தித்துறை வீதி, தையிட்டி, கலைவாணி வீதி முகப்பில் நேற்று மாலை இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நாளை வரை இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
போராட்டக்காரர்கள் நேற்று விகாரைக்கு முன்பாகவே தங்கியிருந்தனர். நேற்று பரவலாக மழை பெய்யததால், விகாரைக்கு எதிரில் உள்ள தனியார் காணிக்குள், காணி உரிமையாளரின் ஒப்புதலுடன் கொட்டகை அமைக்கப்பட்ட போது, பொலிசார் மிலேச்சத்தனமாக நடந்து கொட்டகை அமைக்க தடையேற்படுத்தினர்.
இதனால் போராட்டக்களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சம்பவ இடத்திலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
“சட்டவிரோத விகாரையை அகற்றி காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரி இந்த போராட்டம் நடக்கிறது. விகாரைக்கு முன்பாக உள்ள ஜெயக்குமாரின் காணிக்குள், அவரது ஒத்துழைப்புடன் கொட்டகை அமைக்கப்பட்டது. பொலிசார் மிலேச்சத்தனமாக நடந்து, அவற்றை அகற்ற வைத்துள்ளனர். கொட்டகைகளை அரசுடைமையாக்கி விடுவோம் என மிரட்டினர்.
அங்கிருந்த பொலிஸ் அதிகாரியொருவர், “நாங்கள் யுத்தத்தை வென்றவர்கள். உங்களை எப்படி நடத்துவதென எங்களுக்கு தெரியும்“ என வெறித்தனமாக தெரிவித்தார். அவரது மனதில் கொலைவெறி இருந்ததை பார்க்க முடிந்தது. அவர்கள் சில வேளைகளில் எங்களை கொலைசெய்து விடவும் கூடும். அந்தளவு வெறிகொண்டுள்ளனர்.
இவர்களை பௌத்த பிக்குகள் வழிநடத்துகிறார்களா அல்லது ரணில் வழிநடத்துகிறார்களா என தெரியவில்லை.
அதிலும், ஒரு தமிழ் பொலிஸ்காரர்- தானொரு தமிழன் என கூறிக்கொண்டு வெட்கம் கெட்ட முறையில் சட்டத்துக்கு புறம்பாக, உரிமையாளரின் அனுமதியுடன் அமைக்கப்பட்ட கொட்டகையை அகற்றுவதில் அவர்தான் சிங்களம் பேசுபவர்களை விட தீவிரமாக செயற்பட்டு வருகிறார் என்றார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் கருத்து தெரிவிக்கையில்,
இரவு நேரத்தில் மக்களை விரட்டியடித்த பொலிசார், பாராளுமன்ற உறுப்பினர்கள் செ.கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபனை சிறைப்பிடித்துள்ளனர். அவர்களை அணுகுவதற்கான எமது உரிமையை தடுப்புக்காவல் போட்டு பொலிசார் தடுத்துள்ளனர்.
உதயபால என்கிற பொலிஸ் பொறுப்பதிகாரியும், கலாவினோதன் என்கிற தமிழ் பொலிஸ்காரர் மிருகத்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் நடப்பதை அவதானிக்க முடிகிறது என்றார்.
இதேவேளை, இந்த பதற்றமான நிலைமையின் மத்தியில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிற்கு க.சுகாஷ் கூறும் விடயம் இணையங்களில் வைரலாகி வருகிறது.
இந்த இராணுவத்துக்கு எதிராக போராடிய புலிகள், இவர்களிற்கு சாப்பாடும், தண்ணீரும் கொடுத்தார்கள். யுத்தம் என்பது நேரடியாக மோதுவது. இப்படி சாப்பாடு தண்ணீர் கொடுக்காமல் சாகடிப்பதல்ல என அதில் குறிப்பிட்டுள்ளார்.