இந்தியாவுக்கு அடுத்தவாரம் பயணம் மேற்கொள்வதாக இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தனது பயணத்தை ரத்து செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் உலகளவில் பரவியபோது, ஐரோப்பிய நாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன. அதில் பிரிட்டன் மோசமாகப் பாதிக்கப்பட்டது, ஆயிரக்கணக்கில் உயிரிழப்பைச் சந்தித்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நேரத்தில் பிரிட்டனில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கியது. அப்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூட ரத்து செய்யப்பட்டன.
ஆனால், அதன்பின் பிரிட்டன் அரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது, தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதை வேகப்படுத்தியது. உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடாக மாறிய பிரிட்டன், பல தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கி தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தி, கொரோனா பரவலைக் கட்டுககுள் கொண்டு வந்துள்ளது.
ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்திருந்தநிலையில், தற்போது 2-வது அலையில் சிக்கி பல்வேறு மாநிலங்கள் தவிக்கின்றன. பல மாநிலங்கள் மீண்டும் லாக்டவுன் முடிவுக்கு சென்றுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது, ஆக்ஸிஜன் உள்ளிட்டவைகளிலும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த சூழலில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் , குடியரசுத் தினத்தன்று இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இருந்ததைத் தொடர்ந்து பயணத்தை ஒத்திவைத்தார்.இந்நிலையில் வரும் 25-ம் தேதி இந்தியாவில் பயணம் மேற்கொள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் முடிவு செய்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் இரு நாட்டு தூதரகங்களும் செய்து வந்தன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தீவிரமாக இருக்கும் போது, அந்த நாட்டுக்கு அரசு முறைப் பயணமாகச் செல்வது பாதுகாப்பானது இல்லை எனக் கூறி தொழிலாளர் கட்சியின் எம்.பி.க்கள் போரிஸ் ஜான்ஸனிடம் வலியுறுத்தினர்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், காணொலி வாயிலாகச் சந்தித்து பேச்சு நடத்தலாம், நேரடியாக இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என்று தொழிலாளர் கட்சி பிரதமர் போரிஸ் ஜான்ஸனைக் கேட்டுக்கொண்டது.
இதையடுத்து வரும் 25-ம் தேதி இந்தியாவில் மேற்கொள்ள இருந்த தனது பயணத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ரத்து செய்துவிட்டதாக அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் தெரிவிக்கிறது.இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இந்தியாவில் தற்போது நிலவும் சூழல், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அடுத்தவாரம் மேற்கொள்ள இருந்த இந்தியப் பயணத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ரத்து செய்துள்ளார்.
இந்தியா, பிரிட்டன் உறவுகள், எதிர்கால கூட்டுறவு, திட்டங்கள் ஆகியவை குறித்து பிரதமர் மோடியும், பிரதமர் போரிஸ் ஜான்ஸனும் இம்மாத இறுதியில் காணொலி வாயிலாகப் பேச்சு நடத்துவார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் நேரடியாக இருவரும் சந்தித்துப் பேசுவார்கள்” எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
இந்தியா பிரிட்டன் உறவை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் வரும் நாட்களில் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.