அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மூன்று நாள் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் வாய்ப்பு குறைவு என தெரிய வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில், அரசாங்கம் மொழி உரிமையை மீறியுள்ளது. இதை கண்டித்து, அனைத்து மக்களின் மொழி உரிமையையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் விவாதத்தை தவிர்க்கலாமென அறிய வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை தருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசு கட்சி என்பன கோரியுள்ளன.
சிங்கள மொழிபெயர்ப்பை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள் கோரியுள்ளன.
அரசுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான ஒப்பந்தம் தொடர்பான ஆவணத்தின் ஆங்கில வடிவமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை பாமர மக்கள் அறிந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், அரசு சூழ்ச்சிகரமாக இவ்வாறு செயற்படுவதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




