25.6 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இலங்கை

வவுனியா குடும்பம் உயிரிழப்பு விவகாரம்: நடந்தது என்ன?

வவுனியாவில் இளம் குடும்பமொன்று உயிரிழந்த விவகாரத்தில், இதுவரை மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. அடுத்த சில நாட்களில் முழுமையான மருத்துவ பரிசோதனை விபரங்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியா நகரில், குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இளம் பெற்றோரும், இரண்டு சிறு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

கடந்த 7ஆம் திகதி காலையில் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

42 வயதான சிவபாதசுந்தரம் கௌசிகன், அவரது மனைவியான 36 வயதுடைய கௌ.வரதராயினி, இருபிள்ளைகளான கௌ. மைத்ரா (9), கௌ.கேசரா (3) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

அன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

எனினும் அவர் பதிலளிக்காததை அடுத்து காலை 8.30 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, வீட்டின் முன்பகுதியில்- வாகன நிறுத்துமிடத்தில்- கௌசிகன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

அங்கு சென்றவர் அதிர்ச்சியடைந்து, அயலிலுள்ள மற்றொரு நண்பருக்கு தொலைபேசியில் தகவல் லழங்கினார். உடனடியாக மற்றைய நண்பரும் அங்கு வந்தார்.

குடும்பத்தினர் வீட்டிற்குள் உறக்கத்தில் இருக்கக்கூடும் என நினைத்து, அவர்கள் தகவல் வழங்க வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டின் முன்பகுதியில் இருந்த இருக்கைகளில் இரண்டு பிள்ளைகளும் படுத்திருந்தனர். அவர்கள் உறக்கத்தில் இருக்கிறார்கள் என நினைத்து, அவர்களை தட்டியெழுப்ப முயன்ற போதே, பிள்ளைகள் இருவரும் உயிரிழந்திருப்பதை அறிந்தனர்.

வீட்டின் உள்ளேயிருந்த படுக்கையறையில் மனைவி உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

உயிரிழந்தவர்களின் உடற்கூற்று பரிசோதனை வவுனியா வைத்தியசாலையில் கடந்த 8ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கிடைத்த தகவல்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தின் உணர்வுபூர்வ தன்மை உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில், மேலதிக பரிசோதனையும் மேற்கொள்ள வவுனியா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி பணிமனை தீர்மானித்தமைக்கு அமைய,   உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில், உயிரிழந்தவர்கள் நஞ்சருந்தி உயிரிழக்கவில்லையென்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

சம்பவத்தின் போது, குடும்பத் தலைவர் போதையில் இருந்தாரா என்பது போன்ற சந்தேகங்களிற்கு, கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கையே விடையளிக்கும்.

மூன்று கொலை?

இதுவரையான தகவல்கள், சூழ்நிலைகள், கிடைத்த விஞ்ஞானபூர்வ முடிவுகளின் அடிப்படையில் குடும்வத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தந்தையார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கொலைகளை செய்த பின்னர், தந்தையார் துக்கில் தொங்கினாரா அல்லது பிறிதொரு தரப்பினர் தொடர்புபட்டிருந்தனரா என்பதை பொலிசாரே வெளிப்படுத்த வேண்டும்.

மனைவி, பிள்ளைகள் மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கான தடயங்கள் காணப்படுகின்றன. மனைவியின் கழுத்து, கால்களில் சிறிய  நகக்கீறல் காயங்கள் காணப்படுகின்றன. மனைவியின் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

குழந்தைகளின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இந்த மூவரின் கொலையும் அதிகாலை 1 மணி முதல் 2.30 மணிக்கிடையில் நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.

அதன் பின்னர் அவர்களின் உடல்கள் போர்த்தப்பட்டு, நெற்றியில் திருநீறு அணிவிக்கப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

7ஆம் திகதி காலை 6 மணிக்கு சில நிமிடங்கள் தாமதமாக ஒரு வட்ஸ்அப் தகவலை கௌசிகன் பார்த்ததாக நண்பர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. அப்படியெனில், அவர் காலை 6 மணிக்கு சில நிமிடங்கள் தாமதமாகவே தற்கொலை செய்திருக்கலாம்.

இப்பொழுது 2 சாத்தியங்கள் உள்ளன.

முதலாவது, குடும்பத்தினரை கொன்ற பின் தந்தை தற்கொலை செய்திருக்க வேண்டும்.

இரண்டாவது, இந்த கொலையில் பிறிதொரு தரப்பு சம்பந்தப்பட்டிருந்தால், அவர்கள் காலை வரை வீட்டில் தங்கியிருந்திருக்க வேண்டும். ஏனெனில், கௌசிகனின் கையடக்க தொலைபேசி வீட்டிலேயே இருந்தது.

இதில், எந்த சாத்தியம் உண்மையானது என்பது விரைவில் பொலிசாரினால் வெளிப்படுத்தப்படும்.

பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னர் பொலிசார் உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்ட பின்னரே, இவையனைத்தும் உறுதியாகும்.

இதேவேளை, கௌசிகனின் கைரேகைகளும், கொல்லப்பட்ட மூவரின் உடல் மற்றும் சந்தேகப்படும் படியான பொருட்களில் இருந்து பெறப்பட்ட கைரேகைகளும் ஆராயப்பட்டு வருகின்றன. இதன் முடிவும், இந்த விவகாரத்தில் முக்கிய ஆதாரமாக இருக்கும். (தடயவியல் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள போதும், பொலிசார் இதுவரை வெளிப்படுத்தாததால், அதை தவிர்த்து விடுகிறோம்)

ஏன் இந்த விபரீத முடிவு?

கௌசிகன் கடன் தொல்லையால் அவதிப்பட்டதால் இந்த விபரீத முடிவெடுத்ததாக, கொலையின் பின்னரான ஊடக செய்திகள் அனைத்திலும் தெரிவிக்கப்பட்டது. கடன் நெருக்கடியால் குடும்பத்தினர் தற்கொலை செய்ததாகவே முதற்கட்ட ஊடக செய்திகள் தெரிவித்தன.

எனினும், இதில் ஒருவர்தான் தற்கொலை செய்தார்.

ஊடகங்களில் குறிப்பிட்டபடி, கௌசிகள் கடன் தொல்லையால் அவதிப்பட்ட செய்தியில் உண்மையிருக்கிறது என்கிறார்கள் கௌசிகனின் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தினர்.

வவுனியாவில் கல்லுடைக்கும் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கான அனுமதிப்பத்திரத்திற்காக ஒருவரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், தங்க வர்த்தகத்தில் முதலீடு செய்து நட்டமடைந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், அண்மையில் தனது காரை விற்றும் பணம் கொடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், இரண்டு குடும்பங்களுமே படித்த, வசதியான பின்னணியுடையவர்கள். என்றாலும், இந்த தம்பதியினர் தமது நெருக்கடியை குடும்பத்தின் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை, இந்த சிக்கலை தாமே எதிர்கொண்டுள்ளனர்.

கௌசிகனின் தந்தை அம்மா பகவானின் பக்தர். அதனால் அம்மா பகவானிற்கு சிறிய கோயிலொன்று அமைத்துள்ளார். அவர் காலமான பின்னர், அந்த இடத்திலேயே கௌசிகன் குடும்பத்தினர் குடியிருக்கிறார்கள்.

கௌசிகன் மனைவி, மாமியாரினுடைய குடும்ப நகைகள் வங்கிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு பகுதி கௌசிகனால் அடைவு வைக்கப்பட்டுள்ளது. கடன் நெருக்கடியால் அவர் அவ்வாறு செய்திருக்கலாமென கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், மருத்துவ பரிசோதனை அறிக்கை மற்றும் பொலிசாரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரை காத்திருப்போம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

துமிந்த சில்வா சிறை அறைக்கு மாற்றம்!

Pagetamil

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்துக்குள் நுழைய சொகுசு பேருந்துகளுக்கு அனுமதி!

Pagetamil

மதுபான வரி 6% அதிகரிப்பு: அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

east tamil

சிகரெட் விலை இன்று முதல் உயர்வு

east tamil

ஹெராயின் கடத்தல்: 26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை

east tamil

Leave a Comment