போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொல்பித்திகம பொலிஸார், சம்பவம் தொடர்பில் பொல்பித்திகம பகுதியில் உள்ளநகைக்கடை ஒன்றின் உரிமையாளரையும் பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 37 போலி 1000 ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பொல்பித்திகம கல்டன்வல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக முச்சக்கரவண்டியில் வந்த இராணுவச் சிப்பாயும் அவரது மனைவியும் இரண்டு போலி 1000 ரூபா நாணயத்தாள்களை கொடுத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் போலி நாணயத்தாள் மோசடியை கண்டுபிடித்துள்ளனர்.
1000 ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் ஒரே மாதிரியாக இருந்ததைக் கண்டறிந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்தவர், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த பொல்பித்திகம பொலிசார் இராணுவ சிப்பாயையும் அவரது மனைவியையும் விசாரணைக்காக காவலில் எடுத்தனர்.
தங்கச் சங்கிலியை அடகு வைத்து நகைக் கடையில் பெற்ற பணத்தில் இருந்து பெட்ரோலுக்குச் செலுத்தியதாக இராணுவச் சிப்பாயும், மனைவியும் கூறியுள்ளனர்.
பின்னர், தங்கநகைகளை அடகு வைப்பவரை போல பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த நகைக்கடைக்கு சென்றார். அவருக்கு நகைக் கடை உரிமையாளர் கொடுத்த பணத்தில் போலி 1000 ரூபாய் நோட்டு இருந்தது.
காலையில் ஒரு பெண் வந்து தங்க மோதிரம் மற்றும் கைக்கடிகாரத்தை வாங்கியபோது கொடுத்த 7,000 ரூபாயில் 1,000 ரூபா போலி நோட்டுகள் கொடுத்ததாக நகைக் கடையின் உரிமையாளர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். .
பின்னர் நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில் 61 வயதுடைய பெண்ணை கைது செய்த பொலிசார், அவரிடம் இருந்து 30 போலி 1000 ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்தனர்.
வீதியில் கிடந்த 1000 ரூபாய் நோட்டுகளை தான் எடுத்ததாக அவர் போலீஸாரிடம் கூறினார்.
மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.