கொரோனா தடுப்பூசிக் கொண்டதால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்று கேட்டதற்கு அதெல்லாம் காரணம் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் நேற்று தான் கொவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் மயங்கிக் கிடந்த விவேக்கை அவரின் மனைவியும், மகளும் வட பழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் விவேக் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும், மாரடைப்பு ஏற்பட்டதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தான் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டார். தடுப்பூசி போட்டுக் தொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கொரோனா தடுப்பூசி பற்றி பலவித வதந்திகள் பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இல்லை, பாதுகாப்பு உண்டு.வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். இந்தியாவில் ஒரு நாளுக்கு 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடைவெளி ஆகியவை தான் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு. ஆனால் கொரோனா தடுப்பூசி மட்டும் தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. இதுதான் உயிரைக் காப்பாற்றுகின்ற பாதுகாப்பு. இதை செலுத்திக்கொண்டால் கொரோனா தொற்று வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு இருக்காது என்றார்.