பாஜகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், வரிச்சியூர் செல்வத்துடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், ‘ரவுடியுடன் உனக்கு என்ன வேலை?’ என்று பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா பதிவிட்டதாகவும், இதை நீக்குமாறு வரிச்சியூர் செல்வம் சூர்யாவிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு பதிவிட்டதற்காக சூர்யா தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக வரிச்சியூர் செல்வம் பேசியிருந்தார். ஆனால், “நான் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார்” என்று கூறி, அது தொடர்பான ஆடியோவை சூர்யா வெளியிட்டார்.
இதையொட்டி, சென்னையில் வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சூர்யா என்னை ரவுடி என்று அழைக்கிறார். என்னுடன் மோதும் அளவுக்கு அவர் தகுதியானவர் இல்லை.
நான் ரவுடியிசத்தை விட்டுவிட்டு, எனது குடும்பத்துக்காக திருந்தி வாழ்ந்து வருகிறேன். எனவே, என்னை ரவுடி என்று இன்னமும் அழைப்பது வருத்தம் அளிக்கிறது. மேலும், நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.