சீனாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வென்ற 53 கோடி ரூபாயில், மனைவிக்கு தெரியாமல் தன் சகோதரி, முன்னாள் மனைவிக்கு கொடுத்த பணத்தின் பெரும்பகுதியை மனைவிக்கு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, Zhou என்ற குடும்பப் பெயர் கொண்ட ஒரு நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 10 மில்லியன் யுவான் வென்றிருக்கிறார். இலங்கை மதிப்பில் சுமார் 53கோடி ரூபாய்.
இந்தப் பணம் அவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டபோது, அதிலிருந்து ரூ.10.6 கோடியை தன்னுடைய சகோதரிக்கு அவர் அனுப்பினார். அதன்பிறகு கொஞ்சநாள் கழித்து, தன்னுடைய முன்னாள் மனைவிக்கு ரூ.3.73 கோடியை, வீடு வாங்குவதற்காகக் கொடுத்து உதவியிருக்கிறார். ஆனால் இந்த விஷயங்களையெல்லாம் அவர், தன்னுடைய மனைவியிடமிருந்து மறைத்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் இந்த விஷயம் அவரின் மனைவிக்குத் தெரியவர, மனைவியோ விவாகரத்து கோரி நீதிமன்றத்துக்குச் சென்றார். மேலும் அவரின் மனைவி நீதிமன்றத்தில், சகோதரி, முன்னாள் மனைவி என தன்னிடமிருந்து மறைத்த சுமார் ரூ.15 கோடியில் மூன்றில் இரண்டு பங்கு தனக்கு அவர் கொடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
அதைத் தொடர்ந்து நீதிமன்றம், “அத்ர்ஷ்டலாபத்தில் வென்ற பணத்தில் Zhou தன்னுடைய சகோதரி, முன்னாள் மனைவிக்கு கொடுத்த பணம் என்பது தம்பதிக்கு பொதுவான சொத்து. எனவே மறைத்த பணத்தில் 60 சதவிகிதத்தை Zhou தன்னுடைய மனைவிக்குத் தர வேண்டும்” என உத்தரவிட்டது.