இந்த கோடை காலத்தில், வெப்பத்தின் கொடூரத்தைத் தணிக்க, நாம் தண்ணீர், பழச்சாறு உள்ளிட்டவைகளையே அதிகம் விரும்பி பருகுவோம். இந்த திரவ உணவு வகைகள், நம்மை துடிப்புடன் இருக்க செய்வதுடன், வளர்சிதை மாற்றம் சிறப்பாக இயங்க உதவுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகளவில் சத்துக்களும், குறைந்த அளவில் கொழுப்பு மற்றும் ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்தும் அதைவிட குறைந்த அளவில் கலோரிகளும் உள்ளன.
வெள்ளரி
கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தை தணிக்க உதவும் இயற்கையின் மிக அரிய வரப்பிரசாதமாக வெள்ளரி விளங்குகிறது. இது பழ வகையை சேர்ந்தது என்றாலும், நாம் இதை காய்கறிகள் பட்டியலிலேயே வைத்துள்ளோம். சாலட்கள், ஸ்மூத்திகள், ரைத்தா உள்ளிட்டவைகளை செய்ய இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரியில் உள்ள 96 சதவீத நீர்ச்சத்து, கோடை காலத்தில், நமது உடலின் நீர் இழப்பை தடுப்பது மட்டுமல்லாது, நமது உடலின் வயிற்றுப் பகுதியில் தங்கி, நமது புற அழகை கெடுக்கும் வகையில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் கரைக்கப் பயன்படுகிறது. வெள்ளரியில், நார்ச்சத்தும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.
சுரைக்காய்
வெள்ளரிக்கு அடுத்தபடியாக அதிக நீர்ச்சத்து மிக்க காய்கறி யாதெனில், அது சுரைக்காயே ஆகும். இதில் அதிகளவில் நீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது. சுரைக்காயில், 92 சதவீதம் அளவிற்கு நீர் உள்ளது. சுரைக்காயில், சோடியம், கால்சியம், இரும்புச்சத்து போன்ற மினரல்கள் அதிக அளவிலும், கலோரி மிக குறைந்த அளவிலும் உள்ளது.
தக்காளி
தக்காளியும் பழ வகையை சேர்ந்தது ஆகும். நமது நாட்டு உணவு முறைகளில், தக்காளி யாராலும் மறுக்க முடியாத இடத்தை பிடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். தக்காளியை சமைத்தோ அல்லது பச்சையாகக் கூட நாம் சாப்பிடலாம். தக்காளியை கொண்டு, சூப், சாலட் மற்றும் நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு நாம் சமைத்து சாப்பிடலாம். தக்காளியில், ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகளவில் உள்ளன.
வெண்டைக்காய்
வெண்டைக்காய் ஆங்கிலத்தில் லேடீஸ் பிங்கர் என்றும், ஹிந்தியில் பிந்தி அல்லது ஓக்ரா என்று அழைக்கப்படுகிறது. வெண்டைக்காயில், நீரில் கரையும் மற்றும் கரையாத பண்புகள் கொண்ட நார்ச்சத்துக்கள் மிக அதிகளவில் உள்ளன. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உடல் எடையை குறைக்க இது உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துகிறது. இதய பராமரிப்பு மற்றும் செரிமான மண்டலம் சிறந்து இயங்க உதவுகிறது.
கீரை வகைககள்
கீரை வகைகளில், நமது உடலுக்கு நன்மை பயக்கும் வைட்டமின்களான ஏ மற்றும் சி மிக அதிக அளவில் உள்ளன. கீரைகளை நாம் சாலட்களாகவும், ஷேக்கள் ஆகவும் மற்றும் ஸ்மூத்திகள் ஆகவும் நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து சாப்பிடலாம்.
பாகற்காய்
பாகற்காய் என்றாலே அதன் கசப்புத்தன்மை தான் நம் நினைவிற்கு வரும். இந்த கசப்பு சுவையின் காரணமாக, கேரள மக்கள், பெரும்பாலும் இந்த பாகற்காயை விரும்பி பயன்படுத்துவது இல்லை. உடல் எடையை குறைக்கும் நடவடிக்கைகக்கு பாகற்காய் அளப்பரிய நன்மை புரிகிறது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. பாகற்காயில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால், நமது உடலில் இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
புதினா இலைகள்
வயிறு தொடர்பான உபாதைகளால் அவதிப்படுபவர்கள், புதினா இலைகளை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும். இதை சாப்பிட்டால், நமக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது