ஒப்பந்தத்தை மீறி மின்வெட்டை அமுல்படுத்திய இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகள் மற்றும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் உண்மைகள் சமர்ப்பிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தை மீறி நாட்டின் பல பகுதிகளில் நேற்று (26) மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக மனித உரிமை ஆணையத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மின்சாரசபை மற்றும் அமைச்சகம் நாட்டின் சட்டத்தை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் போது, நடந்து கொண்டிருக்கும் 2022 உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டுகளை விதிப்பதைத் தவிர்ப்பதற்கு மின்சாரசபை ஒப்புக்கொண்டது.
இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை மின்சாரத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் நேற்று அறிவித்தது.