கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்த குடும்பங்களின் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் சுற்று நிருபத்திற்கு அமைவாக 5000 ரூபா வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்கப்படும் இப்பணம் ஆறு கட்டங்களாக வழங்கப்படவுள்ளது.இதன் அடிப்படையில் முதற்கட்டமாக சமுர்த்தி பயனாளிகளுக்கான 5000 ரூபா கொடுப்பனவு நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிலும் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் கண்காணிப்பின் கீழ் இன்று(13) சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்காக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தொகை நாவிதன்வெளி மற்றும் மத்தியமுகாம் வங்கிகளின் மூலமும் நடமாடும் வங்கிச்சேவை மூலமும் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
இக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் கே.ரிஸ்வி யஹ்சர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.ஏ அலீம், சவளக்கடை சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.ஜினேந்திரன், மத்தியமுகாம் சமூர்த்தி வங்கி முகாமையாளர் தமிழ்வாணன் உட்பட சமுர்த்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவு உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக்கொடுப்பனவை தொடர்ந்து சமுர்த்தி பெற தகுதியானவர்கள் முதியோர்கள் நோய்பாதிப்புக்குள்ளானவர்கள் உபகுடும்பம் மற்றும் மேன்முறையீட்டின் மூலம் பெறுகின்றவர்கள் என அனைவருக்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-பா.டிலான்-