தமிழ் தேசிய கூட்டமைப்பாக அல்லாமல், பிரிந்து தனித்து போட்டியிட வேண்டுமென தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடந்தது.
இதன்போது, எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலை எப்படி எதிர்கொள்வதென ஆராயப்பட்டது.
மத்தியகுழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் தனித்து போட்டியிட வேண்டுமென வலியுறுத்தினர். கூட்டமைப்பான போட்டியிடுவதால், கட்சியின் அனைத்து உறுப்பினர்களிற்கும் வாய்ப்பளிக்க முடியாமல் போவதாகவும், இதனால் அவர்கள் கூட்டமைப்பின் மற்றைய கட்சிகளிற்கு சென்று, அந்த கட்சிகள் பலமடைவதாகவும் மத்திய குழு உறுப்பினர்கள் பலர் அபிப்பிராயப்பட்டனர்.
கடந்த தேர்தலில் மட்டக்களப்பில் அப்படி நடந்ததாகவும், தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்களையே ஏனைய கட்சிகள் களமிறக்கி, அந்த வேட்பாளர்கள் இப்பொழுது பங்காளிக்கட்சி உறுப்பினர்களாகி விட்டனர் என அவர்கள் தெரிவித்தனர்.
இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தால், அடுத்த தேர்தலில் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு, தேர்தலின் பின்னர் ஒன்றாக இணையலாம் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர்.
எனினும், கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவும், சட்டத்தரணி கே.வி.தவராசாவும் மட்டும், அதை எதிர்த்தனர். ஒவ்வொருவரும் தேர்தலில் ஆசனம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சிந்திக்காமல், இனநலனின் அடிப்படையில் சிந்திக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
தனித்து போட்டியிட்டால், அதன்மூலம் பிளவு உருவாகி, கூட்டமைப்பு சிதைவடைந்து விடும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனினும், இது பிரிந்து செயற்படுவதல்ல, தனித்தனியாக தேர்தலில் போட்டியிடுவது, அதற்கு பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் முதலில் உடன்பட்டனர், பின்னர்தான் கருத்தை மாற்றி விட்டனர் என சுமந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.