நடைமுறையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு அடுத்தத் தேர்தல் நடைபெறும் திகதி எதுவாயினும் அந்தத் தேர்தலில் தனியாகவோ கூட்டணியாகவோ களம் இறங்குவதற்கு மலையக அரசியல் அரங்கம் தயாராகவுள்ளது என அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புறப்பாடு’ எனும் தலைப்பில் ஹட்டனில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்ட உத்தேச வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாற்று அரசியல் அணிகளை உருவாக்க நினைப்போர் காலாவதியான கட்சித் தலைவர்களை விமர்சிப்பதோடு தங்களது கடமைகளை நிறுத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கு மாறான அமைப்புகளை உருவாக்குவதிலும் தலைமைகளை வளர்த்தெடுப்பதிலும் அக்கறை கொண்டால் மாத்திரமே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அந்த வகையிலதான் பிரதான பிற்போக்கு தலைமைகளுக்கு மாறாகச் சிந்தக்கின்ற புதிய இளந்தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் சுயாதீனக் குழுக்களைக் குறைத்து வாக்குகள் சிதறடிப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு தனிப்பட்டவர்களினதும் பொது அமைப்புக்களினதும் கருத்துக்களை உள்வாங்கி பொது வேலைத்திட்டம் ஒன்றின் கீழ் கூட்டணியாகப் போட்டியிடும் வகையில் மலையகம் அரசியல் அரங்கம் அழைப்பை விடுத்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தொடங்கப்படும் இந்த வேலைத்திட்டம் மலையகத்தின் ஏனைய மாவட்டங்களுக்கும் விரைவில் விஸ்தரிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் பதுளை,கண்டி, களுத்துறை மாவட்டங்களுக்கான ஒழுங்கமைப்பு கூட்டங்கள் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாகவும் அந்தந்த மாவட்டங்களில் ஆர்வம் உள்ளோர் அரங்கத்தின் உள்ளூராட்சி தேர்தல்கள் இணைப்பாளரும் மஸ்கெலிய பிரதேச சபை உறுப்பினருமான கே. சுரேஷ் குமாரைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.