கட்டார் உலகக் கோப்பை கால்பந்து தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) வெளியிட்டுள்ளது. இதில் உலக சம்பியனான அர்ஜெண்டினா 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. சம்பியன் பட்டம் வென்ற போதிலும் அர்ஜெண்டினா அணியால், அவர்களின் பரம எதிரி பிரேசிலிற்கு அடுத்த இடத்தையே பிடிக்க முடிந்தது.
மாறாக உலகக் கோப்பை தொடரில் கால் இறுதி சுற்றுடன் வெளியேறிய பிரேசில் அணியானது சமீபகால ஆண்டுகளின் செயல்திறன் அடிப்படையில் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவிடம் வீழ்ந்த பிரான்ஸ் அணியும் ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தை பெற்றுள்ளது.
லீக் சுற்றுடன் வெளியேறிய பெல்ஜியம் அணியானது இரு இடங்களை இழந்து 4வது இடத்தில் உள்ளது.
கால் இறுதி சுற்றில் தோல்வியடைந்த இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் முறையே 5 மற்றும் 6வது இடத்தில் நீடிக்கின்றன. அரை இறுதியில் தோல்வியடைந்த குரோஷியா 5 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளது.
இத்தாலி 2 இடங்களை இழந்து 8வது இடத்தில் உள்ளது. போர்த்துக்கல் 9வது இடத்திலேயே நீடிக்கிறது. ஸ்பெயின் 3 இடங்கள் இழந்து 10வது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாத ஐரோப்பிய சாம்பியனான இத்தாலி, தரவரிசையில் 8வது இடம் வகிக்கிறது. அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த மொராக்கோ 11 இடங்கள் முன்னேற்றம் கண்டு 11வது இடத்தை அடைந்துள்ளது.
ஏன் பிரேசில் முதலிடத்தில் உள்ளது?
2021 ஆம் ஆண்டில், உலக தரவரிசையை நிர்ணயிக்கும் போது புதிய அல்காரிதம்கள் பயன்படுத்தப்படும் என்று FIFA வெளிப்படுத்தியது. தற்போதைய எலோ முறையானது, FIFA-அங்கீகரிக்கப்பட்ட போட்டியுடன் தொடர்புடைய ஒவ்வொரு ஆட்டத்தின் புள்ளிகள் கணக்கிடப்பட்டுள்ளது. இப்போது நட்புப் போட்டிகளுக்கு குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
FIFA புள்ளிகளை தீர்மானிக்கும் பல விடயங்கள் உள்ளன. உதாரணமாக, போட்டியின் கூடுதல் நேரம் பெனால்டியில் வெற்றியீட்டுவதை விட, 90 நிமிடங்களுக்குள் வெற்றி பெறுவது அதிக புள்ளிகளைப் பெற வழிவகுக்கிறது. அர்ஜென்டினா இந்த உலககோப்பையில் இரண்டு போட்டிகளில் ஷூட்அவுட்களில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது.
பிரேசில் உலகக் கோப்பையில் மூன்று ஆட்டங்களில் வென்றது மற்றும் இரண்டில் தோல்வியடைந்தது, அதே நேரத்தில் உலககோப்பை தொடங்குவதற்கு முன்பு அர்ஜெண்டினாவை விட வசதியான முன்னிலையில் இருந்தது.
உலக கிண்ணத்தில் அர்ஜென்டினா இரண்டு ஆட்டங்களையும் ஷூட்அவுட்டிற்கு செல்வதற்கு முன்னரே முடித்திருந்தால், முதலிடத்திற்கு முன்னேறியிருப்பார்கள்.
இலங்கை
இந்த தரவரிசையில் இலங்கை 207வது இடத்தை பிடித்துள்ளது. தர வரிசையில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை 211. அதாவது தரவரிசையில் இலங்கைக்கு பின்னால் இன்னும் 4 நாடுகள் உள்ளன.
இந்தியா 106வது இடத்தை பிடித்துள்ளது.