காரைநகர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 2023ம் ஆண்டிலிருந்து வர்த்தகர்கள், பிரதேச சபையில் பெறும் வியாபார அனுமதியை விட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் வியாபார அனுமதியினை கட்டாயமாக பெற வேண்டும் என, இன்று காரைநகர் பிரதேச சபை தவிசாளர் தலைமையில் காரைநகர் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க.பாலச்சந்திரன் தெரிவித்தார். இந்த தீர்மானம் சுகாதார பரிசோதகர்களினால் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தரக்குறைவான பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது, பொதிசெய்யப்பட்ட பொருட்களின் காலாவதியாகும் திகதி, தரம் போன்றவற்றை சரிபார்த்து கொள்வனவு செய்யும் நிறுவனங்களிடமிருந்து கொள்வளவில் ஈடுபட வேண்டும் எனவும்,
குறிப்பாக பொதிசெய்யப்பட்ட உணவில் காட்சிப்படுத்தப்படும் துண்டு பிரசுரம் மூன்று மொழிகளில் ஏதாவது ஒரு மொழியில் கட்டாயமானது,
குறிப்பாக சீனா மற்றும் வேறு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் காரைநகர் பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றது. அந்த பொருட்களில் சீன மொழியில் வேறு மொழியில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் மக்கள் இடர்பாடுகளை எதிர் நோக்குகின்றனர்.
சிகரெட், புகையிலை பொருட்களை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும் அவ்வாறு விற்பனை செய்யப்படுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,
நீர் விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் கட்டாயமாக குளோரின் பாவிக்க வேண்டும் அந்த குளோரினும் நன்றாக அரைத்து நீரில் அதற்குரிய நியமத்திற்கு இணங்க நீரில் போட்டு நீர்விநியோகிக்கப்பட வேண்டும் எனவும்,
நீர் விநியோகத்தில் ஈடுபடும் பௌசர்களின் உட்பகுதியும் தரம் பரிசோதிக்கப்பட்டு உரிய தர சான்றிதழ் பெற வேண்டும் அதேபோல நீர் பெறும் இடங்களிலும் மூன்றுமாதத்திற்கு ஒருதடவை நற்சான்று பத்திரம் பெறவேண்டும் என குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.