பேராதனை பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று புதிய மாணவர்களுக்கு இணையத்தளத்தில் ஆபாச இணையத்தளங்களின் முகவரிகளை அனுப்பி அவற்றைப் பார்த்து பதிலளிக்குமாறு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் பகடிவதை சம்பவம் பற்றி விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார விஞ்ஞான பீடத்தின் புதிய மாணவர் ஒருவர் முறைப்பாடு செய்ததையடுத்து, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தலைமை ஒழுக்காற்று அதிகாரி சனிக்கிழமை (5) பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
புதிய மாணவர்களின் தொடர்புத் தொலைபேசி எண்களை உள்ளடக்கி, இணை சுகாதார அறிவியல் பீடத்தின் மூத்த மாணவர்கள் குழு ஒரு வட்ஸ்அப் குழுவை உருவாக்கி, அதற்கு ஆபாசமான இணையதளங்களின் முகவரிகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவற்றை பார்த்து, தாம் எழுப்பிய வினாக்களிற்கு பதிலளிக்குமாறு புதிய மாணவர்களை அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
புதிய மாணவர்களை ஆபாசமான காட்சிகள் மற்றும் புகைப்படங்களைப் பார்த்த பின்னர் பதிலளிக்குமாறு கோரிய சில அச்சுறுத்தும் ஒலி நாடாக்கள் அடங்கிய தொலைபேசி இலக்கத்தையும் ஒழுக்காற்று அதிகாரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
மாணவர்கள் அநாமதேயமாக புகார்களை அளிப்பதற்காக இணைய பக்கமொன்றை பல்கலைக்கழகம் திறந்துள்ளது. அதன் மூலம் புதிய மாணவர் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.