வியன்னாவில் அமெரிக்காவும், ஈரானும் நடத்திய மறைமுக பேச்சுவார்த்தை புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்று ஈரான் ஜனாதிபதி ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
ஒஸ்திரிய தலைநகர் வியன்னாவில் ஈரான் – அமெரிக்கா அதிகாரிகள் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக வியன்னாவில் மறைமுக பேச்சுவார்த்தை புதன்கிழமை நடந்தது.
இந்த நிலையில் இந்தத் பேச்சு வார்த்தை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி, “ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. மேலும் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அதிகாரிகள் அனைவரும் நேர்மறையான மதிப்பீட்டையே வழங்கியுள்ளனர்“ எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விரைவில் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஈரான் – அமெரிக்க மோதல்
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015இல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார்.
மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இந்நிலையில் டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் கடந்த 2015இல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது.
இதன் காரணமாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது. இந்த நிலையில் ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்க முனைப்பு காட்டி வருகின்றது.