மீன் வியாபாரி ஒருவரிடமிருந்து பணம் திருடப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன், இதுவரை 29 திருட்டுகளை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
9,700 திருடப்பட்டமை தொடர்பில் மீன் விற்பனையாளரின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுவன் கைது செய்யப்பட்டதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் குறைந்தது 29 திருட்டுகளை செய்திருப்பது தெரியவந்தது. அந்தத் திருட்டுகளில் கையடக்கத் தொலைபேசிகள், முச்சக்கர வண்டி உதிரி பாகங்கள், மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் என்பன அடங்குகின்றன.
04ஆம் தரம் வரை மட்டுமே பாடசாலைக்குச் சென்ற இந்த சிறுவன், தாய் தந்தையரின் பிரிவால் பாடசாலைப் படிப்பை நிறுத்த வேண்டியுள்ளது.
திருட்டுச் சம்பவத்தில் கிடைத்த பணத்தை தனது நண்பர்களுடன் ஹோட்டல்களில் சாப்பிட பயன்படுத்தியுள்ளார்.
இந்த சிறுவனிடம் அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் கடன் வாங்கியது தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது, காவலில் உள்ள இடத்திலிருந்தும் தன்னை மீண்டும் பாடசாலைக்கு அனுப்புமாறு சிறுவன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுவன் தொடர்பான நன்னடத்தை அறிக்கையை பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.