யாழ்ப்பாணம், வவுனியாவில் உள்ள வைத்தியர்கள் இருவர் தத்தமது தனியார் மருத்துவ நிலையங்கள் ஊடாக மாதாந்தம் சக்தி வாய்ந்த வலி நிவாரணி மாத்திரைகளை கொள்வனவு செய்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை தற்போது வடக்கில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு பதிலாக உட்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைமருந்துக்கு அடிமைானவர்கள், அது கிடைக்காத சமயங்களில் அதிசக்தி வாய்ந்த வலி நிவாரணி மாத்திரைகளை பயன்பாடுத்தி வருகிறார்கள்.
மிகமிக அத்தியாவசியமான சமயங்களில், அரிதான சந்தர்ப்பங்களில் வைத்தியர்களின் கண்காணிப்பில் நோயாளிகளிற்கு வழங்கப்படும் இந்த மாத்திரைகளை இளைஞர்கள் சட்டவிரோதமாக பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது இரண்டு வைத்தியர்கள் அதிகளவான சக்தி மிக்க வலி நிவாரணி மாத்திரை கொள்வனவு செய்த தகவல் வெளியாகியுள்ளது.
வலிகாமத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் வைத்தியர் ஒருவரும், வவுனியா வைத்தியர் ஒருவரும் அதிகளவான மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளனர்.
வலிகாமம் தனியார் வைத்தியசாலையும் பரிசோதிக்கப்பட்டது. அந்த மாத்திரைகள் யாருக்கு விநியோகிக்கப்பட்டது என்ற பதிவுகள் அங்கிருக்கவில்லையென தெரிய வருகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல மருந்து மொத்த விற்பனை நிலையத்தில் இருந்து வவுனியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது தனியார் மருத்துவ நிலையத்தின் பெயரில் மாதாந்தம் 400 பெட்டி அதி சக்தி வலி நிவாரணி மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளார். அவர் வவுனியாவிலுள்ள அரச மருத்துவமனை ஒன்றிலும் பணியாற்றுகிறார்.
இ;நிலையில், இவ்வளவு பெருந்தொகை போதை மாத்திரை மருத்துவ தேவைக்காக இருக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாக பலரும் சுட்டி காட்டி வரும் நிலையில் பொறுப்பு வாய்ந்த மருத்துவர்களட பெருந்தொகை சக்தி மிக்க வலி நிவாரணி மாத்திரைகளை மாதாந்தம் பெற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கவனம் செலுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளது.