29.2 C
Jaffna
March 12, 2025
Pagetamil
இலங்கை

குருந்தூர்மலையில் நியாயம் கேட்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை கைது செய்துகொண்டு, புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டை எதிர்பார்க்காதீர்கள்: நாடாளுமன்றத்தில் த.சித்தார்த்தன்!

நீதிமன்ற உத்தரவை மீறி குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் பௌத்த ஆலயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மீது வழக்கு தொடர்வது, நல்ல சகுனமல்ல. புலம்பெயர்ந்தவர்களை முதலிட வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்தால், அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு வந்து முதலிட மாட்டார்கள். அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள தமிழர்களுடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணை தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தன்.

நேற்று (21) நாடாளுமன்றத்தில் அவர் உயைராற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றபோது, நாங்கள் மிக முக்கியமாக பார்க்க வேண்டிய விசயம், அநேகமாக வருமானத்தை அதிகரிக்கின்ற விசயங்கள் வரிகளை உயர்த்துவது சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். வரிகளை உயர்த்துகின்றபோது சாதாரண ஏழை மக்கள் பாதிக்கப்படாத வகையில் இருக்க வேண்டும். அநேகமாக மறைமுக வரிகள் என்று சொல்லப்படக்கூடிய வற் வரிகள் போன்றவைதான் நேரடியாக எங்களுடைய மக்களின் அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலைகளை உயர்த்தி இன்று மிகக் கஷ்டமான நிலையிலே சில வேளைகளில் சில குடும்பங்கள் ஒரு நேர சாப்பாடை சாப்பிடுகின்ற, இரண்டு நேர சாப்பாட்டை சாப்பிடுகின்ற அல்லது ரெண்டு நேர சாப்பாடே கிடைப்பதற்கு கஸ்டமான நிலையிலே இருக்கின்றபோது, விலைகளை உயர்த்தக்கூடிய வகையில் இந்த வரிகளை உயர்த்தக்கூடாது. ஆனால் வற்வரி உயர்த்தப்பட்டு விட்டது.

வருமான வரிகளை எங்கு எங்கு எடுக்க முடியுமோ அங்கு எல்லாம் எடுத்து இந்த வருமானத்தை உயர்த்துவதற்கான முழுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும். அது சம்பந்தமாக மகிந்தானந்த மிகத் தெளிவாக பல விசயங்களைக் கூறியிருந்தார். அதைச் சரியான முறையிலே செய்ய வேண்டும்.

வருமானத்தைக் கூட்டுகின்ற அதேநேரத்தில் இந்த லஞ்ச ஊழல் என்பது இன்றும் மிகவும் பெரும்பான்மையாகப் போய்க்கொண்டிருக்கின்றது. அதைத்தடுப்பது எப்படி அதற்கான தண்டனைகள் எப்படி தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் நிச்சயமாக இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியும். ஒரு முக்கியமான விசயம் இந்த லஞ்ச ஊழலை தடுக்காவிட்டால் இது தொடர்ந்து நடக்கின்றபோது இந்த நாட்டை அது இன்னும் அதாலபாதாளத்திற்குள் தள்ளிக்கொண்டே இருக்கும்.

நாங்கள் ஏலவே வங்குரோத்து நாடாக உலய நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் இது இன்னும் கடுமையான நிலைமையை உருவாக்கும். இந்த வருமானத்தை உயர்த்தி செலவீனங்களைக் கட்டுப்படுத்தத் தவறுவோமாக இருந்தால் முக்கியமாக இந்த பாதுகாப்பு நிதி என்று சொல்லி யுத்தத்திற்குப் பிறகுகூட அதே மட்டத்திலேதான் இன்றும் ஒதுக்கப்பட்டுக்கொண்டு வருகிறது.

இந்த பாதுகாப்பு நிதி இன்று எப்படி பாவிக்கப்படுகின்றது என்றால், பாதுகாப்பு படைகள் விடயங்களைத் தவிர்த்து இன்னொரு விசயமும் நடந்துகொண்டு இருக்கின்றது, வடகிழக்கிலே இந்து தலங்களைச் சேர்ந்த இடங்கள் இவைகளை தொல்பொருள் திணைக்களம் அதன்கீழ் இராணுவமும் சேர்ந்து கொண்டுவருவது மாத்திரமல்ல அங்கு பௌத்த கோயில்களை கட்டுவது இப்போது புது விசயமாக இந்த பஞ்ச ஈஸ்வரங்கள் என்று சொல்லக்கூடிய ஐந்து ஈஸ்வரங்களில் மிக முக்கிய தலமாக இருக்கக்கூடிய கோணேஸ்வரத்தில் ஒரு சுற்றுலாத் துறையையும் அமைக்கப்போகிறார்கள். ஒரு மிகப்பெரிய பௌத்த ஆலயம் அமைக்கப்படுகிறது. இப்படியான பல விசயங்களை செய்து அந்த கோணேஸ்வரத்தின் புனிதத் தன்மையை இல்லாமல் செய்வதற்கான முழுமையான முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. இவையெல்லாம் இந்த அரசுக்கான நிதிகளிலேயே நடந்துகொண்டிருக்கின்றது. இந்த சுற்றுலாத்தலத்தை அங்கு கொண்டுவருவதன் மூலம் அதனுடைய புனிதத் தன்மையை இல்லாமற் பண்ணுவது மாத்திரமல்ல, அந்த ஆலயத்திற்கென ஒதுக்கப்பட்டிருக்கக்கூடிய 18ஏக்கர் நிலத்தைக்கூட இன்று அபகரிக்கின்ற ஒரு நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவைகள் கட்டாயமாக உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதைமீண்டும் புனிதத் தலமாக பிரகடனப்படுத்த வேண்டும்.

65ஆம் ஆண்டு திருச்செல்வம் அவர்கள் அமைச்சராக இருந்தபோது அதை புனிதத் தலமாக ஆக்குவதற்கு ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். அந்த ஆணைக்குழு அவருக்குத் தெரியாமலேயே கலைக்கப்பட்டது. அதன் காரணமாக அவர் தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார். இது 65ஆம் ஆண்டே அதாவது டட்லி சேனாநாயக்க அவர்களுடைய அரச காலத்திலேயே ஆரம்பித்த விசயம். இந்த ஆக்கிரமிப்பு என்பது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

அங்கு மாத்திரமல்ல, குருந்தூர் மலையிலும்கூட ஒரு மிகப்பெரிய ஆக்கிரமிப்பு நடந்துகொண்டிருகின்றது. அங்கு நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்தும் கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றது. அந்த கட்டிட வேலைகள் நடக்கின்றபோது உள்ளுர்வாசிகள் சிலர் இன்று நீங்கள் நீதிமன்ற உத்தரவை மீறி நடக்கிறீர்கள் என்பதைச் சுட்டிக்காட்ட அங்கு சென்றபோது, அவர்களில் மிக முக்கியமாக கந்தையா சிவநேசன் என்பவர் கடந்தகாலத்து மாகாணசபையில் ஒரு அமைச்சராக இருந்தவர். அதேபோல ரவிகரன் ஒரு மாகாணசபை அங்கத்தவராக இருந்தவர். அதேபோல நண்பர் பாராளுமன்ற உறுப்பினர் நோகராதலிங்கம் இவர்கள் எல்லாரையும் தொடர்ந்து அலைக்கழித்து அலைக்கழித்து பொலிசுக்கு அழைப்பதும் அவர்களை விசாரிப்பதுமாகவே இருக்கின்றார்கள்.

அது மாத்திரமல்ல இப்போது அவர்களுக்கு வழக்கு வைப்பதற்கான முஸ்தீபுகள் நடந்துகொண்டிருப்பதாகவும் நாங்கள் அறிகின்றோம். இவைகளெல்லாம் நிச்சயமாக தமிழ் மக்ககள் மத்தியிலே ஒரு நல்ல எண்ணத்தைக் கொடுக்கப்போவதில்லை.

இன்று ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றார். புலம்பெயர் தமிழர்களுடைய முதலீடுகளைப் பற்றிப் பேசுகின்றார். அவர்களுடைய ஒரு சில அமைப்புக்களின் தடைநீக்கப்பட்டிருக்கின்றது. ஒரு சில தனிப்பட்டவர்களுக்கு தடை நீக்கப்பட்டிருக்கின்றது. அங்கு பல அமைப்புக்களுக்கு தடைகள் இன்றும் இருக்கின்றது. இது ஒரு கொள்கை ரீதியான விசயமாக எடுக்கப்பட வேண்டும். அவர்களைப் பொறுத்தமட்டில் புலம்பெயர் தமிழர்கள் அங்கு வெறுமனே சும்மா இயங்கிக் கொண்டிருக்கவில்லை. இங்கிருக்கக்கூடிய தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் தமிழ் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் பாடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

அதைத் தீர்க்காமல், அண்மையிலே கூட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் பேசிய இந்தியப் பிரதிநிதி மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார், ஒரு அரசியல் தீர்வு இல்லையேல் இன இணக்கப்பாடு கிடையாது. இன இணக்கப்பாடு இல்லையென்றால் பொருளாதார வளர்ச்சி கிடையாது. இது உண்மை. அவர் சொல்லியிருக்கிறார். அவருக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு மிகப்பெரிய நாட்டினுடைய பிரதிநிதி யூஎன்எச்சீஆரிலேயே சொல்லியிருக்கின்றார். அதை நாங்கள் வரவேற்பது மாத்திரமல்ல அவருக்கு நன்றியுடையவராக தமிழ் பிரதிநிதி என்ற ரீதியிலே நாங்கள் இருக்கின்றோம்.

இதை இந்த நாட்டிலே இருக்கக்கூடிய அரசு மாத்திரமல்ல எதிர்க்கட்சி மாத்திரமல்ல பொதுவாக பெரும்பான்மையின கட்சிகள் அனைத்தும் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு முன்வைக்காவிட்டால் இந்த பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசுவதென்பது ஒரு கண்துடைப்பாகவே இருக்கும்.

ஆகவே அந்த பிரச்சினையைத் தீர்ப்பதன் மூலம் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் அனைவருமாக சேர்ந்து பொருளாதார கட்டமைப்பைக் கட்டமைப்பதன்மூலம் இந்த நாட்டை ஒரு சுபீட்சத்தை நோக்கி கொண்டுபோக முடியும். ஆகக்குறைந்தது இந்த வங்குரோத்து நிலையிலிருந்தாவது முதலில் மீட்டு கொண்டுவர முடியும். இதைக் கட்டாயமாக முடிக்க வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அங்கஜனால் நாட்டுக்கு ஏற்பட்ட வீண் விரயம்: நடவடிக்கையெடுக்க சபாநாயகரிடம் கோரிக்கை!

Pagetamil

14ஆம் திகதியுடன் முதலாம் தவணை நிறைவு!

Pagetamil

தென்னக்கோனின் ரிட் மனு விசாரணை நிறைவு!

Pagetamil

அனுராதபுரத்தில் பெண் வைத்தியரை வல்லுறவுக்குள்ளாக்கிய காமுகன் கைது!

Pagetamil

தமிழ் காங்கிரசும் கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!