மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் திப்பொடுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் நேற்று கண்டிக்கு விஜயம் செய்த டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்துள்ளார்.
பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கண்டி தலதா மாளிக்கைக்கு சென்று வழிபட்டதன் பின்னர் மகாநாயக்க தேரரை சந்திப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தவறியதால், மறு அறிவித்தல் வரை எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திப்பதில்லை என மல்வத்தை மகாநாயக்கர் தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டது.
எனினும், இந்த தீர்மானத்தின் பின்னர்- கோட்டாபய தரப்பின் தொடர்ச்சியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை அவர் சந்தித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.