மக்களின் போராட்டம் பெரும்பாலும் அமைதியான முறையில் இடம்பெற்ற போதும், அரசியல் கட்சிகளின் தலையீடு போராட்டத்தின் நோக்கத்தை களங்கப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் மாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணதுங்க, தேவை ஏற்பட்டால் மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதாக தெரிவித்ததுடன், முறைமை மாற்றத்திற்கான பொது மக்களின் கோரிக்கைகளுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.
தாம் அரசியலில் இணையும் போது முறை மாற்றமொன்றை அமுல்படுத்த வேண்டும் என தாம் நம்புவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர், கட்சி அரசியல் தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைப்பதாக தெரிவித்தார்.
தற்போதைய முறைமைக்கு அப்பாற்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றத்தை அமுல்படுத்துவதற்கு நாட்டை மேம்படுத்துவதற்கு தயாராக இருக்கும் ஒரு குழுவிற்கு ஆதரவளிப்பதாக ரணதுங்க கூறினார்.
மக்களின் போராட்டம் ஒரு அமைதியான இயக்கம் என்றும், அரசியல் தலையீட்டின் பின்னர் ஒரு பின்னடைவு காணப்பட்டது என்றும் முன்னாள் அமைச்சர் கூறினார்.
பெரும்பான்மையானவர்கள் பொறுப்பேற்க விரும்பாத நேரத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஜனாதிபதிகளையும் பிரதமரையும் தொடர்ச்சியாக பதவி நீக்கம் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென தாம் நம்புவதாகத் தெரிவித்த ரணதுங்க, கடந்த காலங்களில் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றியதாகவும், தொலைநோக்குப் பார்வையினால் நாட்டுக்கான நோக்கங்களை நிறைவேற்ற முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
அவரும் பணிகளை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் ஒரு எழுச்சி உருவாகலாம் என முன்னாள் அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களினால் தீர்வுகள் கிடைக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நேர்மறையான செயல்கள் பாராட்டப்பட வேண்டும் அதே வேளையில் எதிர்மறையானவை விமர்சிக்கப்பட வேண்டும் என்றார் ரணதுங்க.