தனது 9 வயது மகளுக்கு சூடு வைத்து கொடூரமாக சித்திரவதை செய்த தாயை பல்லேவெல பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (26) ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வபாதமுல்ல, கலேலியா பகுதியைச் சேர்ந்த மொஹமட் ரிஷாய் பாத்திமா என்ற 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாயினால் சித்திரவதைக்கு உள்ளான மகள், கைகால்களில் பலத்த தீக்காயங்களுடன் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணிடம் சிறுமி கூறிய தகவலொன்றிற்காக, தனது மகளை கொடூரமாக தாக்கியதுடன், கரண்டியால் சூடாக்கி கை, கால்களில் சூடு வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சித்திரவதை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்தின் மூத்த மகள். அவருக்கு ஒரு இளைய சகோதரனும் சகோதரியும் உள்ளனர். சிறுமி சித்திரவதை செய்யப்பட்ட போது இளைய சகோதரனும் சகோதரியும் வீட்டில் இருந்ததாகவும் தந்தை வேலைக்குச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.