சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு ஹோட்டலை கைப்பற்றிய இஸ்லாமிய ஆயுதக்குழுவின் முற்றுகை, 30 மணி நேரத்தின் பின் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சோமாலிய இராணுவம் அறிவித்துள்ளது.
ஹோட்டலுக்குள் இருந்த ஆயுதக்குழுவினர் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும், ஹோட்டலிற்குள் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டுள்ளதா என்ற சோதனைகள் இன்னும் முடியவில்லையென நேற்றிரவு சோமாலிய இராணுவம் கூறியது.
எவ்வாறாயினும், இந்த முற்றுகையில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்பு படைகள், அல்-ஷபாப் போராளிகளின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மேலதிக விபரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என்று கூறினர்.
நன்கு அறியப்பட்ட ஹயாத் ஹோட்டல் மீது அல்-கொய்தாவின் துணை அமைப்பான அல்-ஷபாப் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் முன்னதாக செய்தி வெளியானது.
ஹோட்டலிற்குள் அரசு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட தாங்கள் பிணைக் கைதிகளை பிடித்து வைத்திருந்ததாக இஸ்லாமிய ஆயுதக்குழு நேற்று உறுதிப்படுத்தியிருந்தது.