யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும், தீவக சிவில் அமைப்பின் உப தலைவருமான கருணாகரன் குணாளன் மீது, ரௌடிகள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த குணாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவக பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத செயற்பாடுகளிற்கு எதிராக துணிச்சலுடன் செயற்பட்டு வரும் குணாளன் மீது ரௌடிகள் நடத்தியுள்ள இந்த தாக்குதல், தீவகத்தின் ரௌடிகள் கலாச்சாரத்தின் ஆபத்தான போக்கை உணர்த்தியுள்ளது.
புங்குடுதீவில் இடம்பெற்ற சட்டவிரோத மாடுகடத்தல் சம்பவம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட பேருந்து உரிமையாளர் அகிலன் கொலை தொடர்பில் கொலையாளிகளை அடையாளம் காட்டியமை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
இவ்வழக்கில் முன்னிலையாவதற்காக குணாளன் ஊர்காவற்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, மூவர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
மண்கும்பான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளிற்கு எரிபொருள் நிரப்பி விட்டு சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் முகத்தை மறைத்தபடி வந்த 3 ரௌடிகள் அவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தினர்.
பின்னாலிருந்து அவரது முதுகில் முதலில் வெட்டினர். பின்னர் மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து விழுந்ததும் அவரை வாளால் வெட்டினர்.
சுதாகரித்த குணாளன் ரௌடியொருவனை தள்ளிவிட்ட போது, அவனது தலைக்கவசம் கழன்ற போது, திருட்டு வழக்கில் பிணையில் வெளிவந்த படையப்பா என்பவனே அவன் என்பது தெரிந்தது. ஏனைய இரண்டு ரௌடிகளும் அடையாளம் காணப்படவில்லை.
வாள்வெட்டு தாக்குதலில் குணாளனின் கையில் 3 விரல்கள் சேதமடைந்தன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மூலம் அவை சரி செய்யப்பட்டுள்ளன.
குணாளன் தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.




