சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய கவனயீர்ப்பு பேரணி இன்று (2) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான பேரணி, நடைபவனியாகச் சென்று பெருங்காட்டு சிவன் ஆலயத்தை சென்றடைந்தது.
இதன்போது, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், கல்விக்கு முன்னுரிமை வழங்குதல், தீவகப் பகுதிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான சமூகச் சூழலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர்.
குறிப்பாக, புங்குடுதீவு தீவின் மத்தியில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் மாணவர்களால் வலியுறுத்தப்பட்டது.
மேலும், சிறுவர்களின் உரிமைகள் மற்றும் கல்வி உரிமையை உறுதி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி மற்றும் எதிர்கால நலனை உறுதி செய்யும் வகையில் தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்தக் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.




