மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றுகின்ற நிறுவனங்களாக உள்ளூராட்சி சபைகள் விளங்குவதுடன், பொதுமக்களினதும் வர்த்தகர்களினதும் ஒத்துழைப்பு கிடைக்கும்போது உள்ளூராட்சி சபைகளால் இன்னும் வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வுகளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “நடமாடும் சேவை மற்றும் வருமான மேம்பாட்டு நாள்” நிகழ்வுகள் (14) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைகள் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புபட்டு, மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் அறிந்து செயற்படும் நிறுவனங்களாகும். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், பிரதேசத்தின் சுகாதாரம், தூய்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் உள்ளூராட்சி சபைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் தினசரி திண்மக்கழிவு அகற்றுதல், வடிகால்களைத் துப்புரவு செய்தல், தெருவிளக்குகளை பொருத்துதல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சேவைகளை சபையிடமுள்ள வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி உச்சகட்ட வினைத்திறனுடன் வழங்கி வருகின்றோம்.
எனினும், உள்ளூராட்சி சபையொன்றின் செயற்பாடுகள் வெற்றியடைவதற்கு சபையின் முயற்சிகள் மாத்திரம் போதுமானதல்ல. பொதுமக்களினதும் வர்த்தக சமூகத்தினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். குறிப்பாக திண்மக்கழிவு முகாமைத்துவம், வரி மற்றும் கட்டணங்களை செலுத்துதல், பொது இடங்களை சுத்தமாக வைத்திருத்தல் உள்ளிட்ட விடயங்களில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
“உள்ளூராட்சி வாரம் – 2026” ஊடாக மக்களுக்கும் உள்ளூராட்சி சபைக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதும், சபையின் சேவைகளை மக்களுக்கு இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொடுப்பதும் எமது நோக்கமாகும்.
மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கும், சபையின் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதற்கும் இந்த நடமாடும் சேவை மற்றும் வருமான மேம்பாட்டு நாள் சிறந்த வாய்ப்பாக அமைகின்றது.
மக்கள் நலனில் எப்போதும் கரிசனை கொண்ட சபையாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்புமிக்க உள்ளூராட்சி நிறுவனமாகவும் காரைதீவு பிரதேச சபை தொடர்ந்து செயற்படும் எனவும் தவிசாளர் எஸ். பாஸ்கரன் மேலும் தெரிவித்தார்.




