அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம (ATHTHAMA)” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக, தூய்மையான தேசத்தை உருவாக்கும் நோக்கில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இன்று (08) விசேட தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.
கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் வழிகாட்டலின் கீழ், கோப்பாய் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இந்தத் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கோப்பாய் பிரதேச செயலாளர் ஈ. தயாரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளீன் ஸ்ரீலங்கா பிரதேச ஒருங்கிணைப்பாளர் வைத்திய நிபுணர் சி. நித்தியரூபன், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஜோதிவேல் நிஷாந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டதுடன், வைத்தியசாலை வளாகத்தை தொடர்ச்சியாக தூய்மையாகவும் சுகாதாரமான முறையிலும் பேணுவதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.
இந்தச் சிரமதானப் பணியில் கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை விமானப்படையினர், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், மக்கள் நலன் விரும்பிகள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று தமது பங்களிப்பை வழங்கினர்.
பொது இடங்கள், குறிப்பாக வைத்தியசாலைகள் போன்ற மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இடங்களை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பேணுவது அனைவரினதும் பொறுப்பாகும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், இன்றைய தூய்மைப்படுத்தும் பணியுடன் இந்த வேலைத்திட்டம் நிறைவடையாமல், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், அச்சுவேலி வைத்தியசாலை வளாகத்தின் தூய்மை மற்றும் சுகாதாரத் தரத்தை தொடர்ந்து பேணுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டார்.
“தூய்மையான சூழல் – ஆரோக்கியமான மக்கள் – தூய்மையான தேசம்” என்ற இலக்கை நோக்கி, அரச அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் இவ்வாறான மக்கள் நலன் சார்ந்த பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.




