திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

Date:

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ -சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், ‘தேர்தல் வழக்குகளில், தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன்வைப்பதுண்டு.

இடைத்தேர்தல் நடத்தி எம்எல்ஏவை தேர்ந்தெடுத்த பின், தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்துவிட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற்படும் என்பதால், தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் 1967 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனால் தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது’ என வாதிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், ‘தேர்தல் வழக்குகள் குறித்த ஆவணங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்துக்கு வரப்பெறவில்லை. அதனால், இந்த வழக்கில் நிலைபாட்டை தெரிவிக்க இயலாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், ‘தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே முதல்வர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்யும்போது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை’ என தெரிவித்தார்.

முதல்வர் விஜய் தரப்பில், ‘இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் வாக்காளாராக இல்லாத மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்ய அடிப்படை உரிமை இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும்’ என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘ஜனநாயக நடைமுறையில் புனிதம் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் மனுதாரரின் அடிப்படை உரிமை குறித்த கேள்வி பொருந்தாது; தேர்தல் வழக்கு முடிவுக்கு வருமமுன்பு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன பிரச்சினை எழும்’ என குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய வேண்டியுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதுவரை, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் கேட்டதால் பேச்சு நடத்த தயார்… ஆனால் போர் நிறுத்தம் முறிந்து விட்டது!

பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் கோரியதாகவும், அதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் போர்...

யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை செய்த கும்பல் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர்...

கரூரில் தவெகவின் அலட்சியத்தால் உயிரிழந்த 31 பேருக்கு அரசுப்பணி!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்