2026 கால்பந்து உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கப் போட்டியில் தொடரை இணைந்து நடத்தும் மெக்சிகோ அணி தென்னாபிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிகரமான தொடக்கத்தைப் பதிவு செய்தது. இந்தத் தொடக்கப் போட்டியிலேயே சாதனையாக 3 ரெட் கார்ட்களை நடுவர்கள் கொடுத்ததும் பரபரப்பானது.
மெக்சிகோ நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம், உலகக் கோப்பை வரலாற்றிலேயே 48 அணிகள் பங்கேற்கும் மிகப்பெரிய தொடரின் முதல் போட்டியாக அமைந்தது.
80 ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரங்களுக்கிடையே மெக்சிகோ ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கி ஒன்பது நிமிடங்களுக்குள் ஜூலியன் குயினோனஸ் அடித்த கோல் மூலம் மெக்சிகோ முன்னிலை பெற்றது. சவுதி லீக்கில் இந்த சீசனில் அதிக கோல்கள் அடித்திருந்த குயினோனஸ், தென்னாபிரிக்க கோல்கீப்பர் ரோன்வென் வில்லியம்ஸின் கால்களுக்கு இடையே பந்தை செலுத்தி உலகக் கோப்பையின் முதல் கோலை அடித்தார்.
2006-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையில் ஜெர்மனிக்காக பிலிப் லாம் ஆறாவது நிமிடத்தில் கோல் அடித்த பிறகு, தொடக்கப் போட்டியில் அடிக்கப்பட்ட மிக விரைவான கோலாக இது அமைந்தது.
இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் தென்னாபிரிக்காவின் ஸ்பெபெலோ “யாயா” சித்தோலே, கோல் அடிக்கும் வாய்ப்பில் இருந்த மெக்சிகோ வீரர் பிரையன் குட்டியெரஸை தடுப்பதற்காக கீழே தள்ளியதால் நேரடியாக சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் விளையாடிய தென்னாபிரிக்கா மேலும் அழுத்தத்துக்கு உள்ளானது.
இதனைத் தொடர்ந்து அனுபவம் மிக்க மெக்சிகோ முன்னணி வீரர் ரவுல் ஜிமெனேஸ், இரண்டாவது பாதியின் நடுப்பகுதியில் கோலுக்கு அருகில் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார். சர்வதேசப் போட்டிகளில் ஜிமெனேஸ் அடிக்கும் 46-வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் மெக்சிகோ அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் ஜாரெட் போர்கெட்டியுடன் இணைந்து இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துள்ளார். முன்னிலையில் உள்ள ஜாவியர் “சிச்சாரிட்டோ” ஹெர்னாண்டஸின் சாதனையை எட்ட இன்னும் ஆறு கோல்கள் ஜிமெனேஸுக்குத் தேவைப்படுகிறது.
இந்தப் போட்டியில் 17 வயது 240 நாட்களே ஆன இளம் வீரர் கில்பெர்டோ மோராவை மெக்சிகோ உலகக் கோப்பை அறிமுக வீரராக களமிறக்கியது. இதன்மூலம் உலகக் கோப்பையில் விளையாடிய இளம் மெக்சிகோ வீரராகவும், போட்டி வரலாற்றில் ஆறாவது இளம் வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.
போட்டி முழுவதும் ஒழுங்கீன சம்பவங்கள் இடம்பெற்றன. தென்னாபிரிக்காவின் தெம்பா ஸ்வானே, ரொபெர்டோ அல்வராடோவின் முகத்தில் தாக்கியதற்காக விஏஆர் பரிசீலனைக்குப் பிறகு சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் தென்னாப்பிரிக்கா ஒன்பது வீரர்களுடன் மட்டுமே போட்டியை முடித்தது. உலகக் கோப்பை போட்டி ஒன்றில் ஒரே அணி இரண்டு சிவப்பு அட்டைகள் பெற்றது 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
இதோடு நிற்காமல், கூடுதல் நேரத்தில் மெக்சிகோ வீரர் செசார் மொண்டெஸுக்கும் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இதனால் உலகக் கோப்பை தொடர் தொடங்கிய முதல் போட்டியிலேயே மொத்தம் மூன்று சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டன. இது 2022 கத்தார் உலகக் கோப்பை முழுவதும் வழங்கப்பட்ட நான்கு சிவப்பு அட்டைகளுக்கு வெறும் ஒன்றே குறைவாகும்.
இந்த வெற்றியின் மூலம் ‘ஏ’ பிரிவில் மெக்சிகோ மூன்று புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்ததாக ஜூன் 18-ஆம் திகதி குவாடலஹாராவில் தென் கொரியாவை அந்த அணி எதிர்கொள்கிறது. அதே நாளில் தென்னாபிரிக்கா, அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் செக்கியாவை சந்திக்கிறது.




