மட்டக்களப்பு தாழங்குடா பகுதி வீதியில் வைத்து பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக 8 முறை நீடித்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்த 45 வயதுடைய வரை எதிர்வரும் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
இது பற்றி தெரியவருவதாவது
கடந்த 4ம் திகதி தாழங்குடா பகுதியில் போக்குவரத்து பொலிசார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் இதன்போது மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த கைது செய்யப்பட்டவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை காட்டியுள்ளதையடுத்து பொலிசார் சந்தேகம் கொண்டு அந்த தற்காலிக அனுமதி பத்திரத்தை சோதனையிட்டனர்.
இதன்போது குறித்த சாரதி அனுமதி பத்திரம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சாரதி அனுமதி பத்திரம் பொலிசாரால் கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் கோப்பாய் பொலிசாரால் தற்காலிகமாக சாரதி அனுமதி பத்திரம் வழங்கியுள்ளனர் இதனையடுத்து சம்மாந்துறையைச் சேர்ந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி தற்போது தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை பயன்படுத்தி 8 முறை அதனை சட்டவிரோதமாக நீடித்து கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் அதிகாரியின் சம்மாந்துறை வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அங்கு கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை மீட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து போலி அனுமதி பத்திரம் வைத்திருந்த காத்தான்குடியை சேர்ந்த வரையும் மீட்கப்பட்ட சான்று பொருளான இறப்பர் முத்திரையுடன் கடந்த 4ம் திகதி கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை வைத்திருந்த பொலிஸ் அதிகாரியை வரவழைத்து விசாரணையின் போது அவரின் மனைவி; இந்த இறப்பர் முத்திரையை பயன்படுத்தி உள்ளதாக வாக்கு மூலத்தில் அவர் தெரிவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-கனகராஜா சரவணன்-



