மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் மீனவர் ஒருவரை கடற்படை புலனாய்வு பிரிவினர் கைது செய்து முழங்காலில் இரண்டு மணித்தியாலம் இருக்க வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளதாக இன்று புதன்கிழமை (08) மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) காலையில் செட்டிபாளையம் கடலில் மீன்பிடிப்பதற்காக ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் நந்தீசன் அனுமதியற்ற மீன்பிடி வலைக்கு பாவிக்கும் ஈயம் துண்டுகளை வைத்துக் கொண்டிருந்தபோது அங்கு சிவில் உடையில் சென்ற கல்லடி கடற்படை முகாமில் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சென்று குறித்த மீனவரை கைது செய்தனர்
இதன்போது மீனவர் நான் அனுமதியற்ற மீன்பிடி வலையான சுருக்குவலை பாவித்து மீன்பிடிக்கும் குற்றத்தை ஒப்புக் கொண்டு அங்கிருந்த வலையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் குறித்த மீனவரை பிடித்து இரண்டு மணித்தியாலம் முழங்காலில் இருக்க வைத்து அடித்து தாக்கினர். இதன் போது அவர் நான் ஒரு சர்க்கரை வியாதி நோயாளி அதற்கான குளிசையை போடுவதற்கு விடுமாறு கோரியும் அவர்கள் அதற்கு அனுமதி வழங்காது அவரை முழங்காலில் வைத்துக் கொண்டனர்.
இதனை அறிந்த அவரது மனைவி சென்று தனது கணவரை முழங்காலில் வைத்து அடித்து சித்திரவதையை கண்டு உடன் அதனை கையடக்க தொலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை செய்து கொண்டதை கண்ட கடற்படை புலனாய்வு பிரிவினர் குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசியை பறித்து அவர் வீடியோ செய்த காட்சிளை அழித்ததுடன் அவருக்கு தகாதவர்த்தைகளால் பேசியும்
அவரை கைது செய்யப் போவதாக மிரட்டி அவரை தாக்க முற்பட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து முழங்காலில் வைத்திருந்த மீனவரை களுதாவளை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அங்கு வைத்திருந்த பின்னர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் காரியாலய அதிகரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து கடற்படை புலனாய்வு பிரிவினரின் தாக்குதலுக்கு உள்ளான மீனவர் மிகவும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை முழங்காலில் வைத்திருந்த காட்சியை தனது பிள்ளைகள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்திருந்ததாகவும் அதனால் மிகவும் வேதனையடைந்துள்ளதுடன் அவமானம் ஏற்பட்டுள்ளதுடன் பிள்ளைகள் அவமானத்தால் பாடசாலைக்கு செல்ல முடியாது என இருந்து வருகின்றனர்
நான் மட்டும் இந்த சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்க வில்லை சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் இந்து சுருக்குவலை பாவித்து மீன்பிடித்து வருகின்ற நிலையில் என்னை மட்டும் கைது செய்தது மட்டுமல்ல முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவரை செய்துள்ளனர் எனக்கு நீதி வேண்டும் சம்மந்தப்பட்வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-கனகராசா சரவணன்-



