மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாகியால் சுட்டுக் கொன்ற இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்ததுடன் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக மங்களகம பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமமான மங்களகம பொலிஸ் பிரிவில் உள்ள பக்கியல்ல சின்னவத்தையைச் சேர்ந்த செல்லத்துரை கிருஷ்ணன் என்பவரின் பெண் எருமை மாடு ஒன்றை சம்பவ தினமான நேற்று அதிகாலையில் மங்களகம 25 ஆவது மைல் கல் பகுதியில் வைத்து துப்பாகியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அந்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



