அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

Date:

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே வேட்பாளர் பட்டியல் அமைந்திருந்தாலும், யாரும் எதிர்பார்க்காத வகையில் அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக 27 தொகுதிகளை கேட்டு வாங்கிய பாஜக, அந்தக் கூட்டணியில் கடைசி ஆளாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டின்போதே பாஜகவுக்கு, அதிமுக வெற்றி வாய்ப்பு இல்லாத பெரும்பாலான தொகுதிகளை தள்ளிவிட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்ததாக தகவல்கள் வெளியானது.

இதன் காரணமாக, அதிமுகவிடம் சில தொகுதிகளை மாற்றி வாங்கும் பணியில் பாஜக தீவிரமாக இருந்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால், இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல், தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர்களையும் அறிவித்து ஒரு வாரமாக பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி.

சில முக்கிய தலைவர்கள் ஒரே தொகுதியை குறிவைத்து கேட்டதும், வேட்பாளர் அறிவிப்பு தாமதமானதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒரு வழியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

கடந்த முறை நெல்லையில் வென்ற நயினார் நாகேந்திரன் இம்முறை சாத்தூரிலும், கடந்த முறை கோவை தெற்கில் வென்ற வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கிலும் போட்டியிடுகின்றனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக முயற்சி செய்த போதிலும், நாகர்கோவில் தொகுதி மீண்டும் எம்.ஆர்.காந்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சியில் கடந்தமுறை வென்ற சி.சரஸ்வதிக்கு பதிலாக அவரின் மருமகளான கிருத்திகா சிவக்குமாருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனை தவிர்த்து, அவிநாசி (தனி) தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் களமிறங்குகிறார். மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், மதுரை தெற்கில் ராம சீனிவாசனும், தஞ்சையில் கருப்பு முருகானந்தமும் போட்டியிடுகின்றனர்.

இந்த முறை பல்வேறு புதுமுகங்களுக்கும் பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதியளவில் பரிச்சயமானவர்களுக்கே அதிகளவில் சீட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 5 பெண்கள் இம்முறை பாஜக சார்பில் களம் காணுகின்றனர்.

காங்கிரஸில் இருந்து எல்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் 4 ஆண்டுகளாக பொறுப்பு ஏதும் வழங்கப்படாமல் இருந்த விஜயதரணிக்கு இம்முறை விளவங்கோட்டில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாஜக தனக்கு கிடைத்த 27 தொகுதிகளில், ஒரு தொகுதியை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு கொடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் திருமாறன், திருப்பத்தூரில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதே நேரத்தில், பாஜகவில் தங்களுக்கு ஓர் இடம் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த புதிய நீதிக் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.

அண்ணாமலைக்கு சீட் இல்லை:

பாஜக வேட்பாளர் பட்டியலில் இப்போதைக்கு அனைவருக்குமான பெரும் ஷாக், ஒரு கட்டத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக பார்க்கப்பட்ட அண்ணாமலைக்கு சீட் கொடுக்காததுதான்.

இம்முறை தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் நயினார் நாகேந்திரன், எல்.முருகனின் கையே ஓங்கியிருந்தது. இதனால், அவர்கள் அண்ணாமலைக்கு சாதகமான தொகுதிகளை கேட்டுப் பெறாமல் இருந்துவிட்டனர் என்று அவரின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுவதாக சொல்லப்படுகிறது.

கடந்த முறை அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை, இம்முறை கோவையின் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளை கேட்டுவந்தார். ஆனால், இம்முறை அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் மொடக்குறிச்சியில் அண்ணாமலையை போட்டியிட சொல்லி தலைமை கேட்டுக்கொண்டது. ஆனால், தனக்கு சாதகமான தொகுதி எதுவும் இல்லாததால் இம்முறை போட்டியிடுவதில்லை என்று அண்ணாமலை உறுதியாக மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அண்ணாமலை தலைமையில் மூன்றாவது அணியமைத்து 2024 மக்களவைத் தேர்தலில் களம் கண்ட பாஜக, பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது. பாஜகவின் எழுச்சிக்கு காரணமாக அக்கட்சியின் இளைய தலைமுறையால் கொண்டாடப்பட்ட அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது, ஒரு தரப்பினருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது உண்மை. இதன் காரணமாக கொங்கு மண்டலத்தில் பாஜகவின் செல்வாக்குக்கு பாதகம் உருவாகலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்ணாமலை மட்டுமல்லாமல் பாஜகவில் பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு, அஸ்வத்தாமன், எஸ்.ஜி.சூர்யா, வினோஜ்.பி.செல்வம் போன்றோரும் இம்முறை தங்களுக்கு சீட் கிடைக்காத வருத்தத்தில் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

வேட்பாளர் பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, ‘ஒரு தொண்டனாக பாஜகவின் வெற்றிக்கு உழைப்பேன். தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றிபெற பாடுபடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடனான தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு, உள் கட்சி தலைவர்களுடனான சீட் பஞ்சாயத்தை தாண்டி ஒருவழியாக வேட்பாளர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. இது வெற்றி பட்டியலாக இருக்குமா என்பது மே4ல் தெரியும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 4 பேர் தப்பியோட்டம்

பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல்...

ஈரான் சுட்டுவிழுத்திய மற்றொரு போர் விமானம்: விமானியை தேடும் ஈரான், அமெரிக்கா!

ஈரானின் ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானத்தின் விமானியை...

அமெரிக்காவையும் சீனாவையும் எதிர்த்து நிற்க, வல்லரசுகள் ஒன்றிணைய வேண்டும்: மக்ரோன் அழைப்பு

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நடுத்தர சக்திகள் ஒன்றிணைந்து அமெரிக்கா மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்