புதிய கட்சி தொடங்கினார் சசிகலா: அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம் பொறித்த கொடி அறிமுகம்

Date:

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய அரசியல் கட்சியை நிறுவியுள்ளார் சசிகலா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா தலைமையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

“தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் அவர்கள் என்றென்றும் விடமாட்டார்கள். அந்த வகையில் இந்த மண்ணில்தான் அந்த முடிவை எடுக்க வேண்டும் என இருந்தேன். என் மனதில் இருந்த அனைத்தையும் உங்களிடம் சொல்லிவிட்டேன். இப்போது நான் என்ன நினைக்கிறேன் என்றால், நான் பேசாமல் இருந்தால் அது ஜெயலலிதாவின் தொண்டர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்கிற மிகப்பெரிய துரோகம் ஆகிவிடும். அதனால் ஒரு தீர்க்கமான முடிவை நான் எடுத்துள்ளேன்.

தமிழகத்துக்காக, தமிழகத்தில் உள்ள மக்களுக்காக, நம் தொண்டர்களுக்காக புதிய களத்தை காணப்போகிறோம். ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க போகிறோம். இது ஒரு திராவிட கட்சியாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஏழை எளிய சாமானிய மக்களுக்கான கட்சியாக, எதிரிகளையும், துரோகிகளையும் வேரெறுக்கும் கட்சியாக செயல்படும்.

நமது கட்சியின் கொடியை இங்கே அறிமுகம் செய்வதும் மகிழ்ச்சி அடைகிறேன். இது கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவத்தை தாங்கி நிற்கின்ற கொடியாக பறக்கும். கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன். இதில் எந்தவித மாற்று கருத்துக்கும் இடமில்லை என்பதை அனைவருக்கும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். களம் காண்போம்…” என்று சசிகலா பேசினார். அதன் பின்னர் கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.

முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா, 2017-ல் ஊழல் வழக்கில் சிறை சென்றதால், அந்த பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார். அதன்பின் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.

2021-ல் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவில்லை. அதன் பின்னரும் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஓரணியில் இணைத்து, ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவேன் என கூறி அமைதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் மீண்டும் இணைக்கப்படுவர் என எதிர்பார்த்தனர். ஆனால் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் இணைக்க முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதன் தொடர்ச்சியாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கப்பட்டார்.

அமைதியாக இருந்த சசிகலா, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். கடந்த அண்ணா பிறந்தநாளின்போது திமுகவை வீட்டுக்கு அனுப்பி மக்கள் விரும்பும் ஆட்சியை கொண்டு வருவேன் என்றார். சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் தனது ஆதரவாளர்களை சந்திப்பதை வழக்கமாக்கினார். அதிமுகவில் தனக்கு இடமில்லை எனத் தெரிந்துவிட்டதால் சசிகலா புதிய கட்சி தொடங்கப்போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தது இப்போது நிஜமாகியிருக்கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மக்களின் தோழர் நல்லகண்ணு: மகத்தான அரசியல் பயணம் – ஒரு பார்வை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் மூத்த தலைவரும், விடுலைப் போராட்ட வீரருமான இரா.நல்​ல​கண்​ணு...

குண்டுதாரியின் வீட்டிலிருந்து கைப்பற்றிய தங்கத்தை மீளளிக்க உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில்...

அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதான சுரேஷ் சாலே பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது!

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்