- “CTC புலிகளின் முன்னணி அமைப்பு”
CTC என்பது கனடாவில் பதிவு செய்யப்பட்ட, கனடிய சட்டங்களின் கீழ் இயங்கும், ஜனநாயக கட்டமைப்புடைய சமூக–அரசியல் அழுத்தக் குழு.
ஒரு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உலகம் முழுவதிலும் வாழ்ந்த தமிழர்கள் அளித்த அரசியல் ஆதரவைக் கொச்சைப்படுத்தி, CTC-யை “வன்னியிலிருந்து இயக்கப்பட்ட அமைப்பு” எனக் கூறுவது வரலாற்றைச் சிறுமைப்படுத்தும் முயற்சியாகும்.
புலம்பெயர் அரசியல் செயற்பாடுகளைத் தகர்க்கும் முயற்சியாகும். இன்றைய தலைமுறையைக் கடந்த காலத்துடன் கட்டிப்போடும் அரசியல் உத்தியாகும்.
2009க்குப் பின்னர் CTC தனது பணியை –
மனித உரிமைகள், தமிழ் இனப்படுகொலை அங்கீகாரம், சர்வதேச நீதிக்கான வலியுறுத்தல், கனடிய அரசியல் ஈடுபாடு போன்றவற்றின் அடிப்படைகளில் முன்னெடுத்து வருகிறது.
இதனை “Remote Control” அரசியல் என்று தரம் தாழ்த்துவது புலம்பெயர் வாழ் தமிழர்களின் அரசியல் சுயாதீனத்தை மறுதலிப்பதாகும்.
- “சுமந்திரன்–சாணக்கியன் ” பின்னணி என்ற சதிவலைக் கோட்பாடு
இலங்கையில் உள்ள எந்த ஒரு தமிழ் கட்சியுடனும், அரசியல் தலைவருடனும் உரையாடுவதென்பது ஜனநாயக அரசியல் செயல்முறை, அரசியல் உரையாடல், சமூக உறவு சார்ந்ததாகும். இதனை “நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இயங்குதல்” என்று கூறுவது ஆதாரமற்றது.
CTC கனடிய மண்ணில் இயங்கும் அமைப்பு. அதன் தீர்மானங்கள், கனடிய அரசியல் சூழல், மனித உரிமை அமைப்புகள், சமூகக் கருத்துக் கோரல்கள் என்ற தளங்களைக் கொண்டவை.
ஒரு அமைப்பு யாருடனாவது உரையாடினால் அது அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளதென்று கூறுவது
அரசியல் சிறுபிள்ளைத்தனமாகும்..
- சி.வி. விக்னேஸ்வரன் விவகாரம் – உள்தமிழ் அரசியல் பிரிவினையைப் புலம்பெயர் தமிழ் அமைப்புடன் இணைக்கும் தவறான முயற்சி
வட மாகாண சபைக் காலகட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் என்பது உள்ளகக் கட்சி அரசியல் வேறுபாடுகளால் உருவானவை. இதில் தனிநபர் கருத்து வேறுபாடுகள், நிர்வாகச் சிக்கல்கள் இருந்தன. இவற்றை CTC உடன் இணைப்பது தெளிவான ஆதாரங்களின்றி குற்றம்சாட்டும் முயற்சியாகும்.
ஒருவரைக் கனடாவிற்கு அழைத்து கௌரவிப்பதென்பது அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒப்புதல் கொடுப்பதென்பதாகாது.
- “இமாலயப் பிரகடனம்” – தவறை ஒப்புக்கொண்டு திருத்தம் செய்த அமைப்பு
இமாலயப் பிரகடனம் தொடர்பாக CTC மீது விமர்சனங்கள் எழுந்தபோது, அதற்கான மன்னிப்பு கேட்கப்பட்டு, விளக்கம் கொடுக்கப்பட்டு, திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதென்பது மறைக்க முடியாத உண்மைகளாகும். ஒரு அமைப்பு தவறை ஏற்றுத் திருத்துவதென்பது பலவீனம் அல்ல, பக்குவம் வாய்ந்த முதிர்ச்சி என்பதாகும்.
- ரவூப் ஹக்கீம் அழைப்பு – அரசியல் ஒப்புதல் அல்ல, உரையாடல் முயற்சி
ரவூப் ஹக்கீம் அவர்களை அழைத்ததென்பது, அவரது கடந்தகாலச் செயற்பாடுகளுக்கு முழு ஆதரவு அளித்தது என்பதல்ல. தமிழ்–முஸ்லீம் உரையாடலை மீண்டும் ஆரம்பிக்கும் காத்திரமான, கனதியான முயற்சி என்பதாகும்.
தமிழ்–முஸ்லீம் உறவுகள் அடிப்படையில் வடக்கு வெளியேற்றம், கிழக்குப் படுகொலைகள், பரஸ்பர நம்பிக்கை முறிவு போன்றவற்றால் காயமடைந்துள்ளன.
இந்தக் காயங்களை ஆற்றுவதற்கான வழி, தனிமைப்படுத்தல் அல்ல. பகை அரசியல் அல்ல. நேரடி உரையாடல், உண்மைகளை ஏற்றுக்கொள்வது, இரு தரப்பினரும் தங்கள் வரலாற்றை எதிர்கொள்வது என்பதன் அடிப்படைகளாலேயே அமைய வேண்டும்.
- கிழக்கு மாகாணப் படுகொலைகள் – ஒருதலைப்பட்ச வரலாறு அல்ல
1990–1992 காலகட்டத்தில், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள், தமிழர்கள் மீதான பழிவாங்கும் வன்முறை, அரச ஆதரவு ஊர்காவல் படைச் செயல்கள் போன்ற அனைத்தும் நடந்தன.
இவற்றை “முழு முஸ்லிம் தரப்பும் தமிழின அழிப்பில் ஈடுபட்டது” எனப் பொதுமைப்படுத்துவதென்பது இனவாத அரசியல் மொழியினால் கட்டமைக்கப்படுவதாகும்.
தமிழ்–முஸ்லீம் ஒற்றுமை என்பது, வரலாற்றுக் குற்றங்களை மறப்பது அல்ல. பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பது அல்ல.
பொது எதிரியையும் அரச மைய இனஅதிகார மையத்தைக் கண்டறிதலுமாகும்.
- “State-Sponsored Muslim Terrorism” போன்ற சொற்கள் – ஒற்றுமையைச் சிதைக்கும் சொல்லாடல்
இத்தகைய மொழியாடல் இன அடையாளத்தைக் குற்றமாக்குகிறது. ஒட்டுமொத்த சமூகத்தை குற்றவாளியாக்குகிறது. சமூகங்களுக்கிடையிலான எதிர்கால உரையாடலை முடக்குகிறது.
தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கோரும் நாம், மற்றொரு சமூகத்தை ஒரே வார்த்தையில் “பயங்கரவாதம்” என்று போர்வையிட்டுக் குற்றம்சாட்ட முடியாது.
- CTC யின் அடிப்படை நிலைப்பாடு
CTC, தமிழ் இனப்படுகொலை அங்கீகாரத்தை முன்னெடுக்கிறது. கனடாவில் மே 18 நினைவு நாளை அரசியல்மயமாக்கி வந்துள்ளது. ஐ.நா மன்றங்களில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மனித உரிமைத் தீர்மானங்களை நிறைவேற்றப் பாடுபட்டிருக்கிறது.
அதே நேரத்தில் CTC, தமிழ்–முஸ்லீம் ஒற்றுமை
என்பது தமிழ் பேசும் மக்களின் எதிர்கால அரசியலைக் கட்டியமைக்க இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்று என்ற அடிப்படையிலான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முயல்கிறது.
CTC யின் செயற்பாடுகள் என்பது தமிழினத்தை பலவீனப்படுத்த அல்ல. பேரினவாதத்துடன் கூட்டுச்சேர அல்ல. “புலம்பெயர் தமிழர் அரசியல் நிகழ்ச்சி நிரல்” மூலம் தமிழர்களுக்கு நிலையான நீதியைப் பெற்றிடப் புத்திசாலித்தனமான முறைமையில் சர்வதேச அழுத்தத்தைத் தொடர முனைவதாகும். தமிழ்–முஸ்லீம் உறவை புதுப்பிக்க உழைப்பதாகும்.
தமிழர் அரசியலில் இன்று தேவைப்படுவது, உட்பகை அல்ல. குற்றச்சாட்டு அரசியல் அல்ல. பரஸ்பர பொறுப்புணர்வு இருதரப்பிலும் தேவைப்படுகிறது.
ஈழத்தமிழர்களின் எதிர்காலம் தனிமைப்படுத்தலில் இல்லை. அது துணிச்சலான சவாலான அரசியல் உரையாடலில் தங்கியுள்ளது.
-நடராஜா முரளிதரன்-



